தமிழக காங்கிரஸ் கட்சியில் உச்சக்கட்ட மோதல் நடந்து வருவதால் கடும் அதிருப்தியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், புதிய கட்சி தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கோஷ்டிகள் நிறைந்த தமிழக காங்கிரசில், தற்போது மாநில தலைவராக இருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இது அவ்வப்போது வெளிப்படையாக தெரியும் வகையில் இருவரும் நடந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் அதிரடியாக வெளியேறி, தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கினார் ஜி.கே.வாசன். வாசன் தனிப் பாதை கண்டதால், டெல்லி காங்கிரஸ் தலைமை இளங்கோவனை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக்கியது.
அதுவரை தலைவராக இருந்த ஞானதேசிகன் மற்றும் பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள், இளைஞர் காங்கிரசார் என்று பெரிய பட்டாளமே வாசனின் பின்னால் அணிவகுத்து சென்றதால் டெல்லி தலைமை அதிர்ச்சி அடைந்தது.
ஆனால் புதியதாகப் பொறுப்பேற்ற இளங்கோவன், ‘வாசன் எங்கும் போகமாட்டார். அவர் மீண்டும் காங்கிரஸ் திரும்புவார் “என்று ஆறுதல் கூறிவந்தார். ஆனால் நடந்த நிகழ்வுகள் வேறு.கட்சி தொடங்கிய வேகத்தில் உறுப்பினர் சேர்க்கை, அறிக்கைகள்,போராட்டம் என்று `டாப் கியரில்` பறக்கத் தொடங்கிவிட்டார் ஜி.கே.வாசன்.
இந்நிலையில், திமுகவில் இருந்து நடிகை குஷ்புவை காங்கிரசுக்கு அழைத்துவந்து புதிய ரத்தம் பாய்ச்ச இளங்கோவன் எடுத்த முயற்சிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தாலும், கட்சி கொஞ்சம் பரபரப்பு அடைந்துள்ளது. குஷ்புவுக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பதவி வாங்கிக் கொடுத்து, இளங்கோவன் அழகு பார்த்துள்ளதும் கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தோடு இளங்கோவனுக்கு இருந்த முரண்பாடுகள் முற்றிய நிலையில் இருப்பதாகவும் அதனால் மீண்டும் காங்கிரசில் பிளவு உண்டாகும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த பல மாதங்களாக மாநில தலைமையின் சார்பில் நடத்தப்படும் கட்சி நிகழ்ச்சிகளை ப.சிதம்பரம் தவிர்த்து வருகிறார். அதனால் அவருக்கும் இளங்கோவனுக்கும் இடையேயான கருத்து மோதல், தமிழக காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கட்சியில் இருந்து விலகியபோது, ” இன்னொருவர் தனது மகனோடு கட்சியில் இருந்து வெளியேறினால் கட்சி வளர்ச்சியடையும்” என்று இளங்கோவன் கருத்து தெரிவித்து இருந்தார்.
ப.சிதம்பரத்தைத்தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டுச் சொல்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையேயான கோஷ்டி பூசல்கள் அதிகரித்தன.இது பற்றி, டெல்லி சென்று ப.சிதம்பரம் மேலிட தலைவர்களிடம் முறையிட்டார். `இதற்குப் பின்னரும் இந்த கட்சியில் நீடிக்க வேண்டுமா?` என்று மேலிட தலைவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் அவர் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்பு நிலவியது. அவரின் மகன் கார்த்தி சிதம்பரமும் தனது ஆதரவாளர்களை அழைத்து தனியாக ஆலோசனையும் நடத்தினார்.
இவர்களின் மோதல் காங்கிரஸ் கட்சியில் விஸ்வரூபம் எடுத்து வந்ததால், மேலிட தலைவர்கள் தலையிட்டு இளங்கோவன், சிதம்பரத்தை எச்சரித்து அனுப்பினர். அதற்கு பின்பு இருவருக்கும் இடையேயான கோஷ்டி பூசல் அடங்கி விட்டது என்று கட்சியினர் நினைத்தனர். ஆனால் இரு தரப்புக்கும் இடையேயான மோதல் தொடர் கதையாகவே நீண்டு வருவது கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ப.சிதம்பரம் தரப்பு, கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறது.
இந்நிலையில், சிவகங்கையில் ப.சிதம்பரம் தனியாகப் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இளங்கோவன், ப.சிதம்பரம் தரப்பு என்ன செய்தாலும் அதற்கு பதிலடி கொடுத்து வருவது ப.சிதம்பரம் தரப்புக்கு கூடுதல் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. கோவையை சேர்ந்த சிலரை கட்சியைவிட்டு நீக்கியதற்கு சிதம்பரம் எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டும் தலைமையை விமர்சித்து இருந்தார்.
அண்மையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஊடகத் தொடர்பாளராக இருந்து வரும் கோபண்ணா, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ப.சிதம்பரம் குறித்து விமர்சனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இது ப.சிதம்பரம் தரப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசில் இருந்து கொண்டே, முன்னாள்நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது கட்சியில் மீண்டும் கோஷ்டி பூசலை உச்சகட்டத்துக்குக் கொண்டு சென்றுள்ளது என காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்தப் பிரச்னையை மேலிடத்துக்கு கொண்டு செல்வது குறித்து ப.சிதம்பரம் தரப்பினர் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே தனிக்கட்சி தொடங்குவது குறித்தும் ப.சிதம்பரம் தரப்பு ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைந்து புதிய கட்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment