முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்றுள்ள மருத்துவமனைகள் மாதம் ஒரு முகாம் நடத்த வேண்டுமென ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள மருத்துவமனை உறுப்பினர்கள் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின்னர் ஆட்சியர் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தும் பட்டியலில் 25 மருத்துவமனைகள் இடம் பெற்றுள்ளன. இந்த மருத்துவமனைகளில் மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டையை பயன்படுத்தி பொதுமக்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவமனை நிர்வாகங்கள் நோயாளிகளிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் இதுவரை 5,82,987 மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சுமார் 25,874 நோயாளிகளுக்கு ரூ.55.34 கோடி காப்பீட்டுத் தொகை செலவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பற்றி பொதுமக்கள் நன்கு தெரிந்திடும் வகையில் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருத்துவமனைகள் விளம்பரப்படுத்தி மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் பாலாஜி, மருத்துவப்பணி இணை இயக்குநர் ச.வித்யாசங்கர், ஒருங்கிணைப்பாளர் அபிஷா, தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் மருத்துவக் கண்காணிப்பாளர் அனந்தகுமார், காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் மற்றும் 25 மருத்துவமனைகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment