ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக இருந்த யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் போர்க்கொடி தூக்கினர்.
அர்விந்த் கேஜ்ரிவால் அனைத்து அதிகாரிகளையும் தன் வசமே வைத்துக் கொண்டு சர்வாதிகாரமாக செயல்படுகிறார் என்று இருவரும் குற்றம்சாட்டினர். தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் கடந்த முறை நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கட்சியின் அரசியல் விவகார குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். யோகேந்திராவிடம் இருந்து செய்தி தொடர்பாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் இன்று மீண்டும் ஆம் ஆத்மி தேசிய செயற்குழு கூடியது. இக்கூட்டத்தில் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோரை தேசிய செயற்குழுவில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதற்கு 200-க்கும் மேற்பட்டோர் வாக்களித்ததால் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களைப் போலவே, யாதவின் ஆதரவாளர்கள் ஆனந்த் குமார், அஜித் ஜா ஆகியோரும் நீக்கப்பட்டனர்.
முன்னதாக, தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வெளியில் யோகேந்திர யாதவும், பிரசாந்த் பூஷணும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பூஷண் குற்றச்சாட்டு:
இந்நிலையில் தாங்கள் நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த பிரசாந்த் பூஷண் கூறும்போது, “தேசிய செயற்குழு கூட்டத்தில் எங்கள் ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டமே கேலிக்கூத்தானது. குண்டர்கள் ஆதரவுடன் எங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.
No comments:
Post a Comment