மத்திய அரசின் பட்ஜெட், ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி அவர்களது தலைமையில் பொறுப்பேற்று 9 மாதங்களான நிலையில், அவரது நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் மக்களவையில் இரண்டாம் முறை பட்ஜெட்டை நேற்று (28.2.2015) அறிவித்துள்ளார்.
முதல் முறை அறிவித்தது முழுமையான ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் அல்ல; இதுதான் முழு நிதி ஆண்டிற்கான பட்ஜெட் ஆகும். ரயில்வே துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்பு அளித்த பட்ஜெட்டும் ஏழை, எளிய, மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாகவே இருந்தது. ஆனால், சில ஜிகினா வேலைகள் - அறிவிப்புகள் மூலம் - ஒப்பனை அதிகமாக செய்யப்பட்டதாக இருந்து இரயில்வே அமைச்சரால், தமிழ் நாட்டிற்குப் பட்டை நாமம் சாத்தும் வகையில் ஏற்கெனவே நடத்தப்பட்ட புதிய ரயில்வே திட்டங்கள் - பாதிக் கிணறு தாண்டியதைப் போல பாதியிலேயே கைவிடப்பட்ட திட்டங்களாகின! முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எடுக்காமலேயே கைவிடப்பட்டன! இந்த பொது பட்ஜெட்டிலும் எதிர்பார்த்தவை தராமல் ஏமாற்றப்பட்ட பட்ஜெட்டாகவே ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்களுக்கு அமைந்துள்ளது வேதனைக்குரியதாகும். டீசல், பெட்ரோல் விலை - உலகச் சந்தையில் 145 டாலர் விலை 45 டாலராக குறைந்துள்ள நிலையில் இங்கு (ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக 3 ரூபாய்க்கு மேல்) ஏற்றப்பட்டுள்ளது!
மற்ற விலைவாசிகள் இதன் மூலம் மேலும் ஏறும் அபாயமும், டீசல் பம்ப் செட் மோட்டார் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் போன்றவர்களையும் வேறு பல தரப்பட்ட நடுத்தர மக்களையும் இது வெகுவாகப் பாதிக்கும் என்பது உறுதி. சேவை வரிகளை மேலும் பல துறைகளுக்கு விரிவாக்கியதோடு, 2 விழுக்காடு கூடுதலாக தூக்கி உயர்த்தியுள்ளதும் மேலே சொன்ன பல தரப்பினரையும் பாதிப்பது உறுதி. வருமான வரி வரம்பு ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாயிலிருந்து மேலும் உயர்த்தி அறிவிப்புகள் வரலாம் என்ற மக்களின் எதிர்பார்ப்பு - ஏமாற்றத்தையே தந்துள்ளது. அதில் மாறுதல் - கூடுதல் ஏதும் அறிவிக்கப்படவில்லை. முதுகுடி மக்களுக்கு அளித்துள்ள சலுகை ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதாகும். அதே நேரத்தில் பெரு முதலாளிகளுக்கான கார்ப்பரேட் ஆட்சிதான் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி என்பதை இந்த பட்ஜெட் உலகுக்கே பிரகடனப்படுத்தியுள்ளது! பெரும் கம்பெனிகள் செலுத்தும் வரி 30 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு அவர்களது மகிழ்ச்சியையும், பாராட்டையும் பெற்றுள்ள பட்ஜெட்டாக உள்ளது என்பதை எவரே மறுக்க முடியும்? கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை அது சமுதாய முதலீடு என்ற தத்துவத்திற்கு ஆதாரமாகும். ஆனால், அது பெரும் அளவில் ஒதுக்கப்படவில்லை. 68,000 கோடி என்பதுதான் கல்வி வளர்ச்சி என்ற யானைப் பசிக்கு இது வெறும் சோளப் பொறிதான்! பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்றும் தனியார் துறையில் அரசு போட்டிருந்த பங்குகளையும் விற்றும், பற்றாக்குறைகளை ஈடு கட்ட முயன்றுள்ளார்கள்! பொன் முட்டையிடும் வாத்து கதை தான் இது! கருப்புப் பணம் பற்றி கடும் விதிகள் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், செயல்பாட்டைப் பொறுத்துதான் அதன் வெற்றி - தோல்வி அமையக் கூடும். விரிவான விளக்கம் பிறகு என்று கூறியுள்ளார் கி.வீரமணி.
No comments:
Post a Comment