வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பாக ஆசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 18-ந் தேதி பிளஸ்டூ கணிதத் தேர்வு நடைபெற்றது. அப்போது, ஓசூர் தனியார் பள்ளியில் ஒரு தேர்வு அறையில் 20 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் தேர்வெழுத வேண்டிய மாணவர்களில் ஒருவர் வரவில்லை. இந்நிலையில் அந்த அறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன் தேர்வுக்கு வராத மாணவனின் வினாத்தாளில் இருந்து ஒரு மதிப்பெண் கேள்விகளை செல்போன் கேமராவில் போட்டோ எடுத்து மற்றொரு ஆசிரியர் உதயகுமாருக்கு அனுப்பியுள்ளார். அந்நேரம், பறக்கும் படையினர் அறைக்குள் நுழைந்துள்ளனர். ஆசிரியர் மகேந்திரனிடம் இருந்து செல்போனை கைப்பற்றினர்.
இது குறித்து பறக்கும் படையினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வு கண்காணிப்பு பொறுப் பாளராக பணியாற்றிய அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் நாகராஜ முருகன் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி , மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து கல்வித்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கண்ணம்மாளிடம் புகார் செய்யப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி பிளஸ்-2 கேள்வித்தாளை வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஆசிரியர்கள் மகேந்திரன், உதயகுமார், கோவிந்தன் மற்றும் ஒருவர் உள்பட 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment