அகமதாபாத்: குஜராத் கலவரத்தின் போது, 14 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 70 பேரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக பனஸ்காந்தா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 59 பேர் பலியானார்கள். இச்சம்பவம், அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த கரசேவகர்களை ஒரு கும்பல் திட்டமிட்டு தீ வைத்து எரித்து கொன்றதாக தகவல் பரவியது.
இத்தகவல் பலவிதமான வதந்திகளாக மாறி பரவியதால் குஜராத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் நாட்டையே உலுக்கும் வகையில் மிகப்பெரிய கொலைக்களமாக குஜராத்தை மாற்றியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குஜராத்தில் 3,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
இதன் ஒருபகுதியாக அம்மாநிலத்திலுள்ள சேஷன் நவா என்ற கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில் 14 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 இந்துக்களும் பலியாகினர். இந்த கலவரம் தொடர்பாக 70 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரித்த பனஸ்காந்தா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி வி.கே.புஜாரா, "வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 70 பேரும் கும்பலாகச் சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபிக்க தேவையான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. எனவே, போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் அனைவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக" உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
நன்றி : இன்நேரம்.காம்
No comments:
Post a Comment