நிலத்தடி நீரை அளவோடு பயன்படுத்தினால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. ஆனால், நாம் அப்படி பயன்படுத்துகிறோமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. நிலத்திற்கு அடியில் நீர்தேக்கம் போல் தேங்கியுள்ள நீரை, பல நாடுகளும் பயன்படுத்த துவங்கிவிட்டன.
'இன்னும் 50 ஆண்டுகளில், நிலத்தடி நீரை முழுவதும் பயன்படுத்திய நாடுகளில், குடிக்க ஒருவாய் தண்ணீர் கூட கிடைக்காத நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கும்' என்ற 'பகீர்' தகவலை வெளிப்படுத்தியிருக்கின்றனர் நீரியியல் ஆய்வாளர்கள்.
தமிழகத்தில் மழைவளம் :
பருவமழை மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து கிடைப்பவை என தமிழகத்தின் நீர்வளம் இருஆதாரங்களாக உள்ளது. தென்மேற்கு பருவமழை மூலம் 32 சதவீதம் மழையும், வடகிழக்கு பருவமழை மூலம் 48 சதவீதம் மழையும் நமக்கு கிடைக்கிறது. மீதி கோடை மழையாக பெய்கிறது.தமிழகத்தில் 52 நீர்த்தேக்கங்கள், 39 ஆயிரம் குளங்கள் உள்ளன. அதில் 25,600 ஏரிகள் வானம் பார்த்தவை. பருவ மழையால் ஆண்டுதோறும் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 2,400 கோடி கன மீட்டர். அண்டை மாநிலங்களிலிருந்து கிடைக்கும் நீரின் அளவு 1,200 கோடி கன மீட்டர். இப்படி ஆண்டொன்றுக்கு 3,600 கோடி கன மீட்டர் நீர் நமக்கு கிடைக்கிறது.இங்குள்ள 33 ஆற்றுப்படுகைகளில் பருவமழையால் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. இங்குதான் உலகிலேயே அதிகளவாக 13 லட்சத்திற்கும் மேற்பட்ட கிணறுகளில் பம்புசெட் வசதியுடன், நீரை உறிஞ்சி எடுக்கிறோம்.
'போர்வெல்'கள்:
பூமிக்கடியில், ஊற்றுப் பெருக்கு எடுக்க வாய்ப்புள்ள நிலத்தடி நீரின் அளவு 2640 கோடி கன மீட்டர். இதில், தற்போது 1320 கோடி கனமீட்டர் தண்ணீரை ஆண்டுதோறும் இறைத்து வருகிறோம். இதனால், நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது. 1984 முதல் 2000 வரை தமிழகத்தில் 6.2 லட்சம் 'போர்வெல்'கள் அமைக்கப்பட்டன.'தண்ணீரில் தன்னிறைவு பெற வேண்டும்' என 2009--2014ம் ஆண்டு வரை 6.5 இஞ்ச் அளவிற்கு 16.50 லட்சம் போர்வெல்கள் அமைக்கப்பட்டன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 2008க்குப் பிறகு ரூ.1.5 லட்சம் செலவில் 1500 கன அடி வரை 6.5 இஞ்ச் போர்வெல்களை விவசாயிகள் அமைத்து நிலத்தடி நீரை பாழ்படுத்துகின்றனர்.'நிலத்தடி நீர் குறித்த அறியாமை, குளங்கள், ஊருணிகள் பராமரிப்பில் அலட்சியம், கிணறுகள் தூர்வாராதது, இருக்கும் அளவிற்கு நீரை பயன்படுத்த வேண்டும் என அறியாமல் கூடுதலாக சாகுபடி செய்வது போன்ற காரணங்களால் போர்வெல்கள் அதிகமாக அமைக்கப்பட்டன. நிபுணர்களை புறந்தள்ளிவிட்டு உள்ளூர்காரர்களால் நீரோட்டம் பார்த்து, போர்வெல்கள் அமைக்கப்பட்டன. இதனால் பூமிக்கடியில் உள்ள தண்ணீர் உறிஞ்சப்பட்டுவிட்டது.
பூமிக்கடியில் நீரோட்டம் :
பூமிக்குள் 500 அடி வரை 8 அடுக்குகளில் 'அக்குபயர்' எனும் நீர்த்தாங்கிகள் இருக்கும். பூமிக்கடியில், பாறைகளுக்கு இடையில் என, 2 இஞ்ச் அளவிலான நீரோட்டம் போன்றவை இவை. குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் இருக்கும்போது இந்த நீர்த்தாங்கிகளில் நீரோட்டம் இருக்கும். மழைக்காலத்தில் அதில் துளையிட்டு போர்வெல் அமைக்கும்போது பிரச்னை இன்றி, குழாயில் தண்ணீர் கிடைத்துவிடும்.இதுவே கோடை காலம் என்றால், 'போர்வெல்' அமைக்கும்போது தண்ணீர் வரும். அமைத்து முடிந்தவுடன், நீரோட்டத்தின் பக்கவாட்டு பகுதிகளை தண்ணீர் மற்றும் பாறை துகள்கள் கலந்த கலவை அடைத்துவிடும் என்பதால் 'போர்வெல்'களில் தண்ணீர் வராது.
எனவே கோடை காலங்களில் 'போர்வெல்' அமைக்கக் கூடாது.ஏற்கனவே கோடை காலங்களில் செம்மண் நிலங்களில் 'போர்வெல்' அமைத்து தூர்ந்து போனவர்கள் என்ன செய்வது? அவர்கள் ஒரு புதிய அமைப்பை உருவாக்க வேண்டும். தரையின் மேற்பரப்பில் போர்வெல் அருகே 6 அடி நீளம், 4 அடி அகலத்திற்கு குழி வெட்ட வேண்டும்.2 அடிநீளமுள்ள 'பிவிசி' பைப்பில் நடுப்பகுதி வரை சல்லடை போல், பக்கவாட்டு பகுதிகளில் துளையிட வேண்டும். அவற்றில் கொசுவலையை சுற்றி கட்டி, அதன் ஒருமுனையை போர்வெல் முகப்புவரை கட்ட வேண்டும். பைப் அருகே இரண்டடியில் பெரிய கற்களையும், அடுத்த இரண்டடியில் சிறிய சரளை கற்களையும், மூன்றாம் இரண்டடியில் மணல் மற்றும் சிறுசிறு கற்களால் நிரப்ப வேண்டும்.பக்கவாட்டில் வரும் தண்ணீர் வடிகட்டப்பட்டு 'நைலான்' வலை மூலம் பிவிசி பைப்பின் சிறுதுளைகள் வழியாக 'போர்வெல்'லுக்குள் சென்றுவிடும். சேமிக்கப்படும் நீர், நீர்தாங்கிகளின் முனையில் அடைக்கப்பட்ட கருங்கல் தூள் கலவையினை நனைத்து, பின் உடைத்து, புதிய நீரூற்றுகள் போல போர்வெல்லுக்கும் கிடைக்கும்.
இதனால் போர்வெல் புத்துயிர் பெற்று நமக்கு நீர் கிடைக்கும்.இதேபோன்று களிமண் பகுதிகள் உள்ள கடலோர மாவட்ட பகுதிகளில் அமைக்கப்படும் 'போர்வெல்'களில், ஆறடி தூரத்தில் நீர்தேங்கும் தொட்டிகளோ குழிகளோ அமைத்தால், அதில் தேங்கும் நீர் நிலத்தடியில் கசிந்து போர்வெல்லில் சேமிக்கப்பட்டு நீண்டநாட்களுக்கு பலன் அளிக்கும். பொதுவாக ஊருணிகள்தான் நீர்நுகர்வுக்கு பெரிதும் உதவுபவை. இவற்றை முறையாக பயன்படுத்தினால் பாதுகாப்பான குடிநீர் நமக்கு கிடைக்கும்.
-சே.ஜெபாஸ்தியார் பிரிட்டோ ராஜ்,
வேளாண் பொறியாளர்,
மாவட்ட நீர்வடிப்பகுதி
மேம்பாட்டு முகமை,
திண்டுக்கல். 99444 - 50552
No comments:
Post a Comment