டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முழுமையான முதல் பொது பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இதனை தாக்கல் செய்கிறார். இதில் வருமானவரி விலக்கு வரம்பு உயர்வு, மானியங்கள் குறைப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி சீர்திருத்தங்கள் தொடர்பான பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டை மோடி அரசு தாக்கல் செய்தது.
இந்நிலையில் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 23-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதாவை அறிமுகம் செய்தபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரயில் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றபோதிலும் புதிய ரயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரயில்வேயை நவீனப்படுத்துவது போன்றவற்றுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
சரக்கு கட்டண உயர்வு, 5 நிமிடங்களில் டிக்கெட், 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு, பெண்கள் பெட்டியில் சிசிடிவி கேமரா, ரயில் நிலையங்களில் வைபை வசதி, ரயில்களின் வேகம் அதிகரிப்பு, ஆன்லைனில் உணவு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. பொது பட்ஜெட் என்றாலே அத்யாவசிய பொருட்களின் விலை ஏற்றம் இறக்கம், வருமான வரி வரம்பு போன்றவை முக்கியத்துவம் பெறும். விலைவாசி கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளனவா என்று மக்கள் எதிர்பார்பார்கள்.
இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவு மற்றும் பெட்ரோலிய பொருட்களின் மானியத்தை 20% குறைப்பது, ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெருபவர்களுக்கு காஸ் மானியம் ரத்து செய்வது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. சமையல் காஸ் மானியம் தற்போது வாடிக்கையாளர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதேபோல் உரம் உள்ளிட்ட பல்வேறு மானியங்களும் வங்கி கணக்கில் சேர்ப்பதற்கான அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 100 சதவீதத்தை தாண்டிவிட்டது. இதில் பாதியை அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. எனவே இதுகுறித்த அறிவிப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது. மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா திட்டம் போன்றவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. ராணுவம், உயர் கல்வி, விவசாயம், சுகாதாரம் போன்ற துறைகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது. கிராமப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, நவீன மயமாக்கல் உள்ளிட்ட திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா அரசை பொருத்தவரை திட்டங்கள் அறிவிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் ஏற்கனவே கிடப்பில் உள்ள திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டே இந்த அரசு திட்டங்களை செயல்படுத்த நினைக்கிறது. எனவே அதற்கு ஏற்றார்போல் நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment