ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளைத் தந்து, இந்த மூன்று தரப்பையும் சமன் செய்யும் வகையிலான சலுகைகளை பொது பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். அதே நேரத்தில் நடுத்தர வர்க்கத்தினர், ஊதியம் பெருவோருக்கு பெரிய அளவில் வரிச் சலுகைகள் இல்லை. நாட்டின் 67வது பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி. இதில் விவசாயிகள் பயனடையும் வகையில்,
விவசாய மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூபாய் 3,000 கோடி நிதி ஒதுக்கீடு; ஊரக மேம்பாட்டுக்காக நபார்டு வங்கிகளுக்கு ரூபாய் 25,000 கோடி நிதி ஒதுக்கீடு; விவசாயிகளுக்கு ரூபாய் 8.5 லட்சம் கோடி கடனுதவி வழங்க இலக்கு; சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காக ரூ.15,000 கோடி கடன் உதவி; சிறுபாசன திட்டங்களுக்காக ரூபாய் 5,300 கோடி நிதி ஒதுக்கீடு போன்றவற்றை அறிவித்திருக்கிறார். விவசாயிகள் பயிர்க்கடனாக 7% வட்டியில் ரூ3 லட்சம் வரை கடனாக பெற முடியும். ஏழைகள் பயனடையும் வகையில் ஆண்டுக்கு ரூ12 செலுத்தினால் விபத்து காலத்தில் ரூ2 லட்சம் காப்பீடு பெறுகிற திட்டத்தையும் அறிவித்துள்ளார் ஜேட்லி.
மேலும் 2020 ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சார வசதி; 2022 க்குள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு; மானிங்கள் ஏழைகளை மட்டுமே சென்றடைய வேண்டும்; வேளான் விலை பொருட்களுக்கு நியாமான விலை கிடைப்பது உறுதி செய்யபடும்; 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்படும்; தொழில் முனைவோருக்கு சிறு, குறு அளவில் கடன் வழங்கும் வகையில் முத்ரா வங்கிகள் உருவாக்கப்படும். அதற்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்படும் போன்றவற்றையும் குறிப்பிடலாம். அத்துடன் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து சமூக பாதுகாப்புத் திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்று அருண்ஜேட்லி உறுதியளித்துள்ளார். அதேபோல் 100 நாள் ஊரக வேலை திட்டத்திற்கு ரூபாய் 34,699 கோடி நிதி ஒதுக்கீடு; சுயதொழில் தொடங்குவோருக்கு உதவ ரூ. 1,000 கோடி நிதி உதவி; வாஜ்பாய் பெயரிலான முதியோர் பென்சன் திட்டம் போன்றவற்றையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதேபோல் பெரு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியானது 30%-ல் இருந்து 25% ஆகக் குறைப்பு; பிரதமரின் கனவுத் திட்டங்களான தூய்மை இந்தியா திட்டம், கங்கை நதி தூய்மையாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு நிதி வழங்கினால் முழுமையான வரிவிலக்கு; செல்வந்தவரி ரத்து ஆகியவை பெருநிறுவனங்களை மகிழ்விக்கக் கூடியதாக இருக்கும். இந்த வரிக் குறைப்பு 4 ஆண்டுகளுக்கு நிலையாக இருக்கும். அதன்பிறகு படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment