Latest News

ரேஷன் கார்டு இருந்தால்தான் ஆதார் கார்டா?


ஆதார் அடையாள அட்டை… இந்த வார்த்தையை தற்போது உச்சரிக்காதவர்களே இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆதார் என்ற வார்த்தை மக்கள் மனதில் பதிந்துவிட்டது. ஏனென்றால் வங்கி கணக்கு முதல் சமையல் எரிவாயு மானியம் பெற இந்த அடையாள அட்டையின் எண்தான் கேட்கப்படுகிறது.

ஏற்கனவே அந்தந்த ஊர்களுக்கு சென்று ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது வெளியூரில் இருந்து வரமுடியாத சூழல் என பல்வேறு காரணங்களினால் பலர் ஆதார் அடையாள அட்டை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள மண்டல அலுவலகங்களிலும், மற்ற பகுதிகளில் தாசில்தார் அலுவலகங்களிலும் தற்போது ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஒரு அடையாள சிலிப் வழங்கப்பட்டது. அந்த அடையாள சிலிப் உள்ளவர்களுக்கு மட்டுமே இப்போது ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்படுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட சிலிப் கொண்டு வராதவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆதார் அட்டைக்கு புகைப்படும் எடுக்கும் பணி நடந்து வருகிறது. ஆதார் அடையாள அட்டைக்கு போட்டோ எடுக்க கூடியவர்கள் என்.பி.ஆர் விண்ணப்பத்தை நிரப்பி கொடுத்து வருகிறார்கள்.

ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க 18 அடையாள சான்றிதழை மத்திய அரசு அறிவித்துள்ளது. அவைகள்: பாஸ்போர்ட், பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசு அடையாள அட்டை, என்ஆர்இஜிஎஸ் வேலைக்கான அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, துப்பாக்கி லைசென்ஸ், புகைப்படத்துடன் கூடிய வங்கி ஏடிஎம் கார்டு, புகைப்படத்துடன் கூடிய கிரெடிட் கார்டு, ஓய்வூதிய அடையாள அட்டை, சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டை, கிசான் பாஸ்புக், சிஜிஎச்எஸ்/இசிஎச்எஸ் அடையாள அட்டை, அஞ்சலக அடையாள அட்டை, கெஜட் அதிகாரி மற்றும் தாசில்தாரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அரசால் வழங்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை / மருத்துவ ஊனமுற்றவர் அந்தந்த மாநில / யூனியன் பிரதேச சான்றிதழ்.

இதேபோல், ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 20 முகவரி சான்றிதழ்கள் வருமாறு: பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், அஞ்சல பாஸ்புக், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வீட்டு மின்சார ரசீது (கடைசி 3 மாதங்களுக்கு உள்பட்டது), வீட்டு குடிநீர் ரசீது (கடைசி 3 மாதங்களுக்கு உள்பட்டது), தொலைபேசி ரசீது (கடைசி 3 மாதங்களுக்கு உள்பட்டது), சொத்து வரி ரசீது (கடைசி 3 மாதங்களுக்கு உள்பட்டது), கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட் (கடைசி 3 மாதங்களுக்கு உள்பட்டது), இன்சூரன்ஸ் பாலிசி, வங்கி முத்திரையுடன் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கடிதம், அரசால் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைக்படத்துடன் கூடிய கடிதம், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கடிதம், என்ஆர்இஜிஎஸ் வேலைக்கான அடையாள அட்டை, துப்பாக்கி லைசென்ஸ், ஓய்வூதிய அடையாள அட்டை, சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டை.

வயதை கணக்கிட பிறப்பு சான்றிதழ், 10ஆம் வகுப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், குரூப் ஏ கெஜட் அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்று போதுமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இப்போது பிரச்னை என்னவென்றால், தாசில்தார் அலுவலகங்களில் ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் வாங்க சென்றால் முதலில் ரேஷன் கார்டு இருக்கிறதா என்று கேள்வி கேட்கப்படுகிறது. இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட மாட்டாது என்று மறுக்கிறார்கள். தன்னிடம், வாக்காளர் அடையாள அட்டை, இன்சூரன்ஸ் பாலிசி, வங்கி பாஸ்புக் உள்ளிட்டவை இருக்கிறது என்று கூறினாலும், ரேஷன் கார்டுதான் வேண்டும் என்று தடாலடியாக பேசி அவர்களை அனுப்பி வைத்துவிடுகிறார்கள் அலுவலக ஊழியர்கள்.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட தாசில்தாரின் உதவியாளர் காந்திமதியிடம் கேட்டபோது, “நாங்கள்தான் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே விண்ணப்பம் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறோம். இதற்கு காரணம், ஏற்கனவே ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இதுவரை அடையாள அட்டை வராதவர்களும் வந்து விண்ணப்பம் வாங்கிச் சொல்கிறார்கள். இதனை தடுக்கவே ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே விண்ணப்பம் கொடுக்கப்படுகிறது. இந்த விண்ணப்பத்தை நாங்கள் கணினியில் பதிவு செய்யும் போது ரேஷன் கார்டு நம்பர் ஏற்கனவே பதிவாகியுள்ளதா என்பது தெரிந்துவிடும். இதனாலேயே ரேஷன்கார்டு கேட்கிறோம். ஆதார் அடையாள அட்டைக்கு ஏற்கனவே புகைப்படம் எடுத்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம். அவர்களுக்கு கண்டிப்பாக ஆதார் அடையாள அட்டை வந்துவிடும்” என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.