சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டு சூறாவளியாக சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர். ஒரு கட்சியின் தலைவரை மற்றொரு கட்சியை சேர்ந்தவர்கள் வாய்க்குவந்தபடி விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், தன்னை விமர்சிப்பதற்காக தனது சமூகத்தையே பா.ஜ.க.வினர் கேவலப்படுத்தி வருவதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று தனது வேதனையை வெளியிட்ட கெஜ்ரிவால் கூறியதாவது:-
பா.ஜ.க. சில நாட்களாக என்னையும் எனது பிள்ளைகளையும் தனிப்பட்ட முறையில் விளம்பரங்களின் மூலம் கடுமையாக விமர்சித்து வந்தது. உன்னை தனிப்பட்ட முறையில் யாராவது தாக்கினால் அதை தாங்கிக் கொள்ளும் வலிமை உனக்கு வேண்டும் என அன்னா ஹசாரே எனக்கு கூறியுள்ளார். இந்த அறிவுரைக்கேற்ப அந்த விமர்சனங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு நான் பதில் பேசாமல் இருந்தேன்.
ஆனால், இன்று அவர்கள் (பா.ஜ.க.) தங்களது எல்லையை கடந்து விட்டனர். எங்கள் (அகர்வால்) சமூகத்தையே மூர்க்கத்தனமான சமூகம் என பா.ஜ.க. விமர்சித்துள்ளது. பா.ஜ.க.வுக்கும் எனக்கும் தான் போட்டி. எனக்கு எதிராக எது வேண்டுமானாலும் கூறட்டும். அதை விடுத்து ஒட்டுமொத்த அகர்வால் சமூகத்தை தாக்குவது முறையல்ல.
இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அவர்கள் (பா.ஜ.க.) ஒட்டுமொத்த அகர்வால் சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தரம்தாழ்ந்து சாதிரீதியான தாக்குதலை தொடங்கியுள்ள பா.ஜ.க.வின் செயலைப் பற்றி தேர்தல் கமிஷனிடம் முறையிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. சார்பில் இன்று வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய இந்த விளம்பரத்தில், ‘நாட்டின் கோடானுக் கோடி மக்கள் குடியரசு தின விழாவை தேசிய திருநாளாக கருதி அதற்காக பெருமைப்படுகின்றனர். ஆனால், உங்கள் மூர்க்கத்தனமான சமூகம் அந்த குடியரசு தின விழாவையே சீர்குலைக்க தயாராக உள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment