6ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது.
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள கோராபுட் மாவட்டத்தில் உள்ள உமுரி நகரில் ஆசிரமப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அதன் அருகே மாணவர்களுக்கான விடுதி ஒன்றும் உள்ளது. இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்கள்.
இந்த விடுதியில் தங்கியிருந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பிரச்னை வரும் என்பதால், இதனை வெளியில் தெரியாமல் பள்ளியின் தலைமையாசிரியரும், விடுதி கண்காணிப்பாளரும் மறைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி விடுதியிலேயே அந்த மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பள்ளி அதிகாரிகளுக்கு தெரியவர, அவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையையும், மாணவியையும் மீட்டுச்சென்று மாணவியின் பெற்றோர் வசிக்கும் உப்பர்கண்டியில் விட்டதோடு, முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு தலைமையாசிரியர் கைலாஷ் வர்மா மற்றும் விடுதி கண்காணிப்பாளர் சபிதா குரு ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும், மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான நபர் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த ஜனவரி 23ஆம் தேதி, இதே மாநிலத்தில் உள்ள லிங்ககடா எனும் இடத்தில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இதேபோன்று பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு மாணவியின் பிரசவம் விடுதியில் நடந்திருப்பது ஒடிசாவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment