டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற நிலையில் அதற்கான முடிவுகள் இன்று தெரிந்துள்ளன. ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றிப் பெற்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது. 2014 ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக பெரும் வெற்றிப் பெற்று ஆட்சியை கைப்பற்றிய 8 மாதங்களுக்குள் நாட்டின் தலைநகரில் நடைபெற்றுள்ள தேர்தலில் பாஜகவை ஆம் ஆத்மி கட்சி மண்ணை கவ்வ வைத்துள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள் மோடியின் 8 மாதக் கால ஆட்சியை பற்றிய மக்களின் கணிப்பீடு அல்ல என்று பாஜக தரப்பில் சப்பைக் கட்டப்பட்டுள்ளது. ஆனால் மோடி தலைமையில் தேர்தல் பரப்புரை நடைபெற்றப் போதும் 70 இடங்கள் கொண்ட டெல்லி சட்டமன்றத்தில் 5 இடங்களில் கூட பாஜக வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு மத்திய அமைச்சர்கள், பிரதமர், கட்சி தலைவர் என வரலாறுகாணாத அளவிற்கு அணைவரும் களம் இறங்கியும் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் 60 இட்ங்களில் பாஜக முன்னிலைப் பெற்றிருந்த நிலையில் தற்போது இதற்கு நேர்மாற்றமாக ஆம் ஆத்மி கட்சி 65 இடங்களில் வெற்றிப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லி முழு இந்தியாவின் ஒரு பிரதிபலிப்பாக அமைந்துள்ள மாநிலம். அங்கு பல்வேறு மத சாதி மற்றும் மொழியினர் வாழ்கிறார்கள். இது போலவே பெரும் பணக்காரர்களும், மத்திய தர மக்களும் மற்றும் அடி தட்டு மக்களும் வாழ்கிறார்கள். டெல்லி தேர்தல் முடிவுகளை ஆய்வுச் செய்யும் போது மதம் சாதி மொழி மற்றும் பொருளாதார வேறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பினரும் மோடியின் 8 மாதக் கால ஆட்சிக்கு எதிராக இத்தேர்தலில் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்று ஆம் ஆத்மி கட்சி வெற்றிப் பெற்றுள்ளது.
வளர்ச்சி என்ற மாயஜலத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து பாஜகவினர் கடந்த 8 மாதங்களாக தொடர்ச்சியாக மதசார்பின்மைக்கு எதிராக நடத்தி வந்த வெறுப்பு பிரச்சாரத்தை தலைநகர் மக்கள் நிராகரித்துள்ளதையும் டெல்லி தேர்தல் முடிவு பிரதிபலிக்கின்றது.
No comments:
Post a Comment