மோடி அலை, மோடி மேஜிக், மோடி சர்க்கார் என்று வாய் வலிக்க வலிக்கப் பேசி வந்த பாஜகவினர் முகத்தில் பலமாக அறைந்து விட்டனர் டெல்லிவாசிகள். சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சி அலையாக மாறிப்போய் விட்டது மோடி அலை. மறுபக்கம் காங்கிரஸ் சுத்தமாக துடைத்தெடுக்கப்பட்டு விட்டது. ஆம் ஆத்மிக்கு மன்னிப்பு கொடுத்து மீண்டும் அரியணையில் ஏற்றியுள்ளனர் டெல்லி மக்கள். நிச்சயம் இது வரலாறு காணாத தேர்தல் முடிவுதான். தனக்கு வாக்களித்த மக்களைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் ஆட்சியை உதறி விட்டுப் போன ஒரு கட்சியை, ஒரு முதல்வரை மீண்டும் அதே மக்கள் அரியணயைில் ஏற்றியது, அதுவும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தியிருப்பது இதுவரை நாடு காணாத ஒரு விஷயமாகும்.
ஆம் ஆத்மி கடந்த 2013 தேர்தலில் 2வது இடத்தையே பிடித்திருந்தது. முதலிடத்தை பாஜக பிடித்திருந்தது. காங்கிரஸ் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. ஆனால் தற்போதைய தேர்தலில் பாஜகவை சிதறடித்து விட்டது ஆம் ஆத்மி. மோடி அலையை ஸ்வாஹா செய்து விட்டது ஆம் ஆத்மி சுனாமி. இந்த இரு பெரும் மோதலுக்கு மத்தியில் காங்கிரஸ் கண் காணாத தூரத்திற்கு ஓடிப் போய் விட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வீசிய மோடி அலையை வைத்து நாடு முழுவதும் பல சட்டசபைத் தேர்தல்களைக் கைப்பற்றி வந்த பாஜகவுக்கு டெல்லி தேர்தல் மிகப் பெரிய அடி என்பதில் சந்தேகம் இல்லை. இதை வைத்து நாட்டின் பிற பகுதிகளில் மக்கள் மனதை முடிவு செய்ய முடியாது என்றாலும் கூட - இது நிச்சயம் பாஜகவுக்கு அடிதான். காரணம், இதைக் கூட பாஜகவால் பிடிக்க முடியாமல் போய் விட்டதே என்ற அடிப்படையில். மிகப் பெரிய சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும், இன்னும் பல அரசியல் பீஷ்மர்களையும் வீழ்த்திய மோடி அலையால், சாதாரண கெஜ்ரிவாலை அடக்க முடியாமல் போனதால் நிச்சயம் டெல்லியில் பாஜகவுக்குக் கிடைத்திருப்பது செமத்தியான அடிதான்.
பாஜக தலைவர் அமீத் ஷா தலைமையிலான குழு பலவிதமான உத்திகளை வகுத்து தேர்தலைச் சந்தித்தது. மோடியே வந்து பிரசாரம் செய்தார். கெஜ்ரிவாலைக் கடுமையாக சாடினார். அதீத நம்பிக்கையுடன் பேசினார். மறுபக்கம் பாஜகவின் கோஷ்டிப் பூசலை அவர்கள் பெரிதாக கவனிக்காமல் விட்டு விட்டனர். ஆளாளுக்கு அதிருப்தியுடன் காணப்பட்டனர். கட்சிக்குள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது.. காரணம் முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனர் கிரண் பேடியின் வருகை. கிரண் பேடி வருகையை பாஜகவில் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. அவரால் கட்சிக்கு எந்த லாபமும் கிடைக்காது என்பதே பாஜகவினரின் கருத்தாக இருந்தது. ஆனாலும் பேடி திணிக்கப்பட்டார் மோடி மற்றும் அமீத் ஷாவால். திணித்தாலும் அவரை ஏற்க மாட்டோம் என்பதை மறைமுகமாக காட்டி விட்டனர் பாஜகவினர். மக்களும் கூட பேடியை நிராகரித்து விட்டனர் இப்போது.
டந்த முறையே 31 இடங்களில் வென்றோம், இப்போது மோடி ஆட்சி மத்தியில் நடக்கிறது. மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. அதிகாரம் உள்ளது. எனவே எப்படியும் பெரும்பான்மை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பாஜக இருந்தது. மேலும் கடந்த முறை கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ஆட்சியை விட்டுப் போனதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள். காங்கிரஸ் காணாமல் போய் விட்டது. எனவே நமது வெற்றி உறுதி என்பதும் பாஜகவினரின் எண்ணமாக இருந்தது. ஆனால் பாஜகவையும், காங்கிரஸையும் ஒரு சேர சேர்த்து தலைமுழுகி விட்டனர் டெல்லி மக்கள். மாறாக, கெஜ்ரிவாலை மன்னித்து மீண்டும் அவரிடம் ஆட்சிப் பொறுப்பை கொடுத்துள்ளனர். அறுதிப் பெரும்பான்மை பலத்துடன். இங்குதான் டெல்லி வாக்காளர்கள் தடுமாறாமல் வாக்களித்திருப்பது தெரிய வருகிறது. கெஜ்ரிவால் கைப்பற்றியுள்ள தொகுதிகளைப் பார்த்தால் நடுத்தர மற்றும் ஏழைகள் அதிகம் வாழும் தொகுதிகள்தான் மிக மிக அதிகமாக உள்ளது. அதேசமயம் பணக்கார வாக்காளர்கள் நிரம்பிய தொகுதிகளிலும் அவர் அலை பரப்பியுள்ளார். இதன் மூலம் மக்கள் உண்மையான மாற்றம் குறித்த தங்களது தாகத்தை இன்னும் கைவிடவில்லை என்பதை நிரூபித்துள்ளனர். பாஜகவும் வேண்டாம் காங்கிரஸும் வேண்டாம் என்று திட்டவட்டமாக டெல்லி மக்கள் சொல்லியுள்ளது நிச்சயம் தேசிய அளவில் மீண்டும் சாமானிய மக்களின் தாகத்தை, ஏக்கத்தை தூண்டி விடுவதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள முடிவுக்கு நிச்சயம் காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்களை மதித்து, மக்கள் பிரச்சினைகளுக்கு மதிப்பளித்து, வெட்டிப் பேச்சுக்கைளைக் கைவிட்டு விட்டு உருப்படியான, மக்கள் அரசியலுக்கு அவர்கள் மாறினால் தவிர இனிமேல் உயிர்ப்பித்து எழுவது என்பது கஷ்டம் என்பது அவர்களுக்கே நன்றாகப் புரிந்திருக்கும்.. இது மோடி தரப்புக்கும் கூட நல்ல பாடம்தான்... இனியும் அலை அலை என்று பேசாமல், அடக்கம் ஒடுக்கமாக ஆட்சி நடத்த அவர்கள் தயாராக வேண்டும். அதுதான் பாஜகவுக்கும் நல்லது.
No comments:
Post a Comment