டெல்லியை போலவே தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரப்போகிறது என்று ஆரூடம் கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கருத்துக் கணிப்புகளையும் கடந்து, ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 70 இடங்களில் 65 இடங்களை வென்று ஆட்சியமைப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல. ஆளும் கட்சியின் அனைத்து பலங்களையும் மீறி அசாதாரணமான வெற்றியை குவித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆம் ஆத்மிக் கட்சியின் வெற்றிக்கான காரணங்களை அலசி ஆராயத் தேவையில்லை. அதன் வெற்றிக்கான காரணம் மிகவும் எளிமையானது. அரசு நிர்வாகத்தில் ஊழல் மலிந்து கிடந்த நிலையில், மாற்றம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மக்களின் மனக்குமுறல்களை உணர்ந்திருந்தார். உணர்வுகளை மதித்தார். இதற்கெல்லாம் மேலாக தங்களின் எதிர்பார்ப்புகளை அரவிந்த் கேஜ்ரிவால் நிறைவேற்றுவார் என்று மக்களும் நம்பினார்கள். அதனால் ஆட்சியை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆம் ஆத்மியின் வெற்றி ரகசியம் இதுதான்.
அதே நேரத்தில் இந்த வெற்றியை அரவிந்த் கேஜ்ரிவால் பொறுப்புடன் கையாள வேண்டும். கடந்த காலங்களில் செய்தது போன்ற தவறுகளை அவர் மீண்டும் ஒருமுறை செய்துவிடக்கூடாது. இந்த அளவுக்கு பெரிய வெற்றி எனக்கு அச்சத்தைக் கொடுத்திருக்கிறது என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருப்பதில் இருந்தே அவர் மக்கள் விரும்பும் ஆட்சியை தருவார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. டெல்லி வாக்காளர்கள் எத்தகைய மனநிலையில் இருந்தார்களோ அதே மனநிலையில்தான் தமிழக வாக்காளர்களும் இருக்கிறார்கள். தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஊழல்களால் மனம் வெறுத்துப் போயிருக்கும் மக்கள், மாற்றத்தை ஏற்படுத்த துடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த உண்மை அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். இதனிடையே அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் தளத்தில், "இப்போது டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளதை போலவே, அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாமக வெல்லும்" என்று கூறியுள்ளார்
No comments:
Post a Comment