டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வரலாறு காணாத அளவிற்கு ஆம் ஆத்மியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது பாஜக. ஆனாலும், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது போல் டெல்லி தோல்விக்கு காரணம் கிரண் பேடிதான் என்று மொத்தமாக குற்றச்சாட்டினை அவர் மீது தூக்கிப் போட்டுள்ளது பாஜக வட்டாரம்.
லோக்சபா தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற போதும் சரி, சிலபல இடைத்தேர்தல்களில் வென்ற போதும் சரி அதற்கு பாஜக சொன்ன காரணம் "மோடி அலை". ஆனால், ஆட்சி அமைத்த ஒருவருடத்தில் நடைபெற்ற தற்போதைய டெல்லி சட்டசபைத் தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் தோல்வியினைத் தழுவியுள்ளது பாஜக. வெறும் 5 இடங்களை மட்டுமே அக்கட்சியினால் டெல்லியில் பெற முடிந்துள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக நியமிக்கப்பட்ட, கிரண் பேடி தான் போட்டியிட்ட கிருஷ்ணா நகர் தொகுதியில் தோல்வியைச் சந்தித்துள்ளார். முடிவுகள் வெளியாவதற்கு முன்னரான கருத்துக் கணிப்புகளிலும் சரி, முடிவுகள் வெளியாகிய நிமிடங்களிலும் சரி பாஜகவினர் குற்றம் சாட்டியது கிரண் பேடியைத்தான். அவரை நிறுத்தியதால்தான் டெல்லியில் பாஜக தோல்வியைச் சந்தித்தது என்று மூலைக்குமூலை மேடை போட்டு கூவிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், டெல்லியில் பாஜகவின் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் அது அனுமார் வால் போல நீண்டு கொண்டேதான் போகும். அவைகளை ஒத்துக் கொள்ள மோடியும் தயாராக இல்லை... அமித் ஷாவும் முன்வரவில்லை. கைகாட்ட கிடைத்த ஒரே காரணம் இருவருக்குமே கிரண் பேடிதான்.
பாவம்... அந்த இடத்தில் யாரை நிறுத்தி இருந்தாலும் இதே முடிவுதான் என்பதை அரசியலில் நிபுணத்துவம் பெற்ற தலைவர்கள் அறிய மாட்டார்களா என்ன?. மொத்ததில் டெல்லி தோல்விக்கு மோடி காரணமல்ல பேடிதான் காரணம் என்றெல்லாம் சப்பை கட்டு கட்டுவதை விட்டுவிட்டு, மதிப்பீடுகளையும், பொய்யான கட்டமைப்புகளையும் விட்டு வெளியில் வந்து நரேந்திர மோடியும், அமித் ஷாவும் தங்களுடைய தோல்வியை பகிரங்கமாக ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதுமட்டுமல்ல தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை சரி செய்யும் முயற்சியையும், ஆட்சி அமைக்கப் போகின்ற ஆம் ஆத்மி கட்சிக்கு தேவையான ஒத்துழைப்பையும் நல்கினால் மட்டுமே உண்மையிலேயே ஐந்து வருடங்களுக்கும் நாம் தேர்ந்தெடுத்துள்ள மத்திய அரசு சரியான தேர்வுதான் என்ற முடிவிற்கு மக்களும் வருவார்கள். இல்லையென்றால் ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு தேர்தல் வரும்... அதை தலைவர்கள் நினைவில் வைத்துக் கொண்டால் சரிதான்!
No comments:
Post a Comment