டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடி அரசுக்கு எட்டே மாத்தத்தில் மக்கள் கொடுத்துள்ள மரண அடி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
"உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977 க்குப் பின்னர் மீண்டும் இப்போது தில்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது. தில்லி மாநில நரேந்திர மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில், பாரதிய ஜனதா கட்சியை படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள்.
சாமானியனுக்கும், சாதாரண மனிதனுக்கும் ஜனநாயகம் ஆட்சி மகுடத்தைச் சூட்டும் என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் விண்முட்டப் புகழ் படைக்கும் வெற்றியாகும். பன்னாட்டுப் பகாசூரக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டுக் கொள்ளைக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஏஜெண்ட் வேலை பார்த்த நரேந்திர மோடி அரசை, எண்ணி எட்டே மாதங்களில் மக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.
நடந்து இருப்பது ஜனநாயகப் புரட்சி. மக்களின் மவுனப்புரட்சி. டெல்லி மாநிலத்தில் மட்டும் அல்ல, காஷ்மீரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை மதச்சார்பற்ற தன்மைக்கு உலைவைக்க முற்பட்டுவிட்ட நரேந்திர மோடி அரசுக்கு எதிரான மவுனப்புரட்சி அலை மக்கள் மனங்களில் எழுந்து விட்டது. இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி மிகுந்த பலம் பெற்று இருந்த டெல்லி மாநிலத்திலேயே அந்தக் கட்சியின் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது; நாடெங்கும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் மனதிலே எழுந்துள்ள கொந்தளிப்பை டெல்லித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி இருக்கின்றன .
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
நன்றி : இன்நேரம்
No comments:
Post a Comment