மதுபான கடைகளை மூட வலியுறுத்தி குடியரசு தினத்தன்று விருதுநகரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.
மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. இவர் தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளை மூட வலியுறுத்தி தனது தந்தை ஆனந்துடன் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த 12-ஆம் தேதி இந்த கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் முழுவதும் சைக்கிளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது, குடியரசு தினமன்று தனது தந்தையுடன் சேர்ந்து மதுபான கடைகளை மூட வலியுறுத்தி விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கூறினார்.
அதன்படி, குடியரசு தினமான நேற்று உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள அவர்கள் இருவரும் விருதுநகர் தேசபந்து மைதானத்திற்கு வந்தனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதியில்லை என்றும், போராட்டத்தை கைவிடுமாறும் கூறினர். ஆனால் நந்தினி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க போவதாக காவல் துறையினரிடம் தெரிவித்தார். இதனை அடுத்து, தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக கூறி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தை காவல் துறையினர் கைது செய்தனர்.
No comments:
Post a Comment