அமெரிக்காவின் நெருக்கடியால் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் அணு ஆயுத ஏவுகணைகள் இடம்பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டின் 66-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அமெரிக்கா அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கடந்த கால டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்த அக்னி, தனுஷ், ஆகாஷ் மற்றும் பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் நேற்றைய அணிவகுப்பில் இந்த ஏவுகணைகள் இடம் பெறவில்லை. இதற்கு அமெரிக்காவின் நெருக்கடிதான் காரணமா? என்ற கேள்விக்கு ‘இதில் சிறிது உண்மை இருக்கிறது" என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த ஏவுகணைகள் இடம் பெற்றால் ஒபாமாவுக்கு அசவுகரியமாக இருக்கலாம் என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் சிதான்சு கர் கூறுகையில், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள் அனைத்தும் கடந்த காலங்களில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை உலகமும் பார்த்துள்ளது. இவை இல்லாத அணிவகுப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது என்றார். அணிவகுப்பில் அணு ஆயுத ஏவுகணைகள் இடம்பெற்றால், இந்தியாவை அணு ஆயுத நாடாக அமெரிக்கா அங்கீகரித்ததாக ஆகிவிடும் என எண்ணியே, அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என பாதுகாப்புத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment