நோக்கியா செல்போன் தொழிற்சாலை மூடப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் செல்போன்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் பட்ஜெட்டில் இது குறித்து அறிவிப்பு இடம் பெறும் என மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதே போன்று மடிக்கணினிக்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்படும் என தெரிகிறது. சுமார் 3 சதவிகிதம் வரை வரி உயர்த்தபடலாம் என்பதால் இவற்றின் விலை உயரும். உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை சந்தைபடுத்த வசதியாகவும் இந்த வரி உயர்வு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வரி உயர்வால் மத்திய அரசுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதே சமயம் இறக்குமதி உயர்வால் இந்திய செல்போன் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் எந்த பலனும் கிடைக்காது என துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது உள்நாட்டில் வசூலிக்கும் வாட்வரி உள்ளிட்டவற்றால் உற்பத்தி விலையும், இறக்குமதி விலையும் சமமாக இருக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.
நோக்கியா நிறுவனம் தனது சென்னை ஆலையை மூடிவிட்டபோதும் லாவா, கார்பன், மைக்ரோ மேக்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் செல்போன் உதிரிபாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் வரியை உயர்த்தும் முடிவு அவற்றிற்கு பாதகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment