இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மொகான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று கூறியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் சிராணி பண்டாரநாயக்கா. அப்போது அதிபராக இருந்த ராஜபக்சே தம்மிடம் அதிகாரங்களைக் குவித்து வைக்கக் கூடிய திவிநெகும என்ற சட்டத்தைக் கொண்டுவந்தார்.
ஆனால் இந்த சட்டத்தை செல்லாது என்று அதிரடியாக சிராணி தீர்ப்பளித்தார். இதனால் அவர் மீது நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இது சர்வதேச அரங்கத்தில் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. சிராணிக்குப் பதிலாக ராஜபக்சேவால் நியமிக்கப்பட்டவர்தான் தற்போதைய தலைமை நீதிபதி மொகான் பிரீஸ். இவர்தான் ராஜபக்சே 3வது முறையாக தேர்தலில் போட்டியிடலாம் என்று அனுமதி கொடுத்தவரும் கூட. இந்த நிலையில் ராஜபக்சேவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் சிராணி பண்டாரநாயக்காவை நிறுத்த வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பின்னர் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து மைத்ரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக அறிவித்தன.
சிராணி பண்டாரநாயக்காவும் மைத்ரிபாலவை ஆதரித்தார். தற்போது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால, ராஜபக்சே ஆதரவாளரான தலைமை நீதிபதி மொகான் பிரீஸ் முன்பாக பதவி ஏற்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். இலங்கை அரசியல் சாசனப்படி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் முன்பாக அதிபர் பதவி ஏற்கலாம் என்பதால் வேறு ஒரு நீதிபதி முன்னிலையில் மைத்ரிபால சிறிசேன பதவி ஏற்க உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. Topics: srilanka, presidential elections, oath, இலங்கை, அதிபர் தேர்தல், பதவி ஏற்பு, தலைமை நீதிபதி, maithripala sirisena
No comments:
Post a Comment