திமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக திமுக தலைமையுடன் ஏற்பட்ட மோதலில், தனது பொருளாளர், இளைஞர் அணிச் செயலாளர் பதவிகளை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்து விட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அவரது வீட்டின் முன்பு திமுகவினர் குவிந்தனர். திமுக வட்டாரமும் பரபரப்படைந்தது. ஆனால் தான் ராஜினாமா செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் மறுத்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் எனவும் அன்றைய தினம் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்புகளுக்காக வேட்புமனுக்கள் 7-1-2015 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு திமுக மேலிட மட்டத்தில் ஒரு திடீர் கலகம் கிளம்பியதாம். அதாவது பொதுச் செயலாளர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக திமுக தலைவர் கருணாநிதியிடம், தற்போதைய பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியதாக சொல்கிறார்கள். ஆனால் இதை கருணாநிதி ஏற்கவில்லையாம். அன்பழகனே பொதுச் செயலாளராக நீடிக்க வேண்டும் என்று அவர் உறுதியாக கூறி விட்டதாக சொல்கிறார்கள்.
திமுக தலைவராக நீண்டகால தலைவராக கருணாநிதி இருந்து வருகிறார். அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் அன்பழகனும் நீண்டகாலமாக பணியாற்றிவருகிறார். எனவே தான் தலைவராக இருக்கும்பட்சத்தில் அன்பழகனும் பொதுச் செயலாளராக நீடிப்பதே முறை என்று கருணாநிதி கூறியதாக தெரிகிறது. மேலும் அன்பழகனை ஓரம் கட்டவும் அவர் விரும்பவில்லையாம். இதனால் ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்தாராம். கருணாநிதியுடன் தொடர்ந்து பேசியும் கூட அவர் தனது கருத்தில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து தான் வகித்து வரும் பொருளாளர் பதவி, இளைஞர் அணிச் செயலாளர் பதவி ஆகியவற்றிலிருந்து விலகுவதாக ஸ்டாலின் தெரிவித்து விட்டதாக தகவல்கள் பரவின.
இதனால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டாலின் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் இன்று காலை திரண்டு விட்டனர். இதனால் திமுக தரப்பில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் தான் எந்தப் பதவியையும் ராஜினாமா செய்யவில்லை என்று ஸ்டாலின் இன்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், நான் எந்தப் பதவியையும் ராஜினாமா செய்யவில்லை. அப்படி வந்த செய்திகள் தவறானவை. வதந்தியானவை. திமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் செய்த முயற்சிகளே இவை. நான் பொருளாளர் பதவியைத் தவிர வேறு எந்தப் பதவிக்கும் போட்டியிடவில்லை. திமுக தலைவர் பதவிக்கு கருணாநிதியும், பொதுச்செயலாளர் பதவிக்கு பேராசிரியர் அன்பழனும் போட்டியிடுகிறார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment