டெல்லி சட்டசபைத் தேர்தல் தொடர்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆம் ஆத்மி, பாஜக தொண்டர்கள் இடையே உண்டான மோதலில் 5 பேர் காயமடைந்தனர். ஆம் ஆத்மி வேட்பாளரின் வாகனமும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. டெல்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. அதிகாரப்பூர்வமாக தேர்தல் அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், டெல்லியில் 49 நாட்களில் ஆட்சியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சி மீண்டும் அங்கு ஆட்சியமைக்க அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து முழு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லி சட்டசபைத் தேர்தல் தொடர்பாக துக்ளக்காபாத் என்ற இடத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற ஆம் ஆத்மி மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த இருகட்சித் தொண்டர்களும் திடீரென மோதிக் கொண்டனர். இரு தரப்பினரும் ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டதாகவும், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் 5 தொண்டர்களுக்கு காயம் ஏற்பட்டது. மேலும், இச்சம்பவத்தில் அத்தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சாஹி ராமின் வாகனம் தீவைத்து கொளுத்தப்பட்டது.
காயமடைந்த இரு கட்சிகளின் தொண்டர்களும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து கோவிந்தபுரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வன்முறை தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியினர் மீது பாரதிய ஜனதா தலைவர்களும், அக்கட்சியினர் மீது ஆம் ஆத்மி தலைவர்களும் பரஸ்பரம் புகார் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment