Latest News

சுண்டல் விற்கும் பிஎச்டி மாணவர்


படிப்புக்காக தனது அண்ணனுடன் கைகோர்த்து சுண்டல் வாளியை தூக்கியபடி, புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் சுண்டல் விற்பனை செய்து வருகிறார், பிஎச்டி பட்டதாரியான பழனிராஜ்.

புதுச்சேரி கடற்கரை மற்றும் நேரு வீதி பகுதியில் மாலை நேரத்தில் கையில் சுண்டல் வாளியுடன் சுறுசுறுப்பாக சுண்டல் விற்பனை செய்யும் ஒரு இளைஞரை பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால், அவர் பிஏ, எம்ஏ, எம்பில் முடித்து தற்போது பிஎச்டி படிப்பவர் என்பது பலரும் அறியாத விஷயம். பரபரப்பான வியாபாரத்துக்கு நடுவே பிஎச்டி படிக்கும் இளைஞர் பழனிராஜை நேரில் சந்தித்தபோது, ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

“எங்களுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அப்பா சுப்பிரமணியன், துணிக்கடையில் விற்பனையாளராக இருந்தார். அம்மா சரஸ்வதி, 2 அக்காள், 2 அண்ணன், 1 தங்கை என மொத்தம் 6 பேர். வறுமையான சூழலில் அக்காள்களுக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடுமையான பண பிரச்சினை காரணமாக வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப எங்கள் குடும்பம் முடிவு செய்தது.

அப்போது, 1998-ம் ஆண்டு நான் 8-ம் வகுப்பு படித்தேன். என்னையும், மற்றொரு அண்ணன் சரவணக் குமாரையும் வேலைக்கு போகுமாறு வீட்டில் தெரிவித்தனர். எங்களுக்கு படிக்க ஆசை. அதனால் புதுச்சேரி கடற்கரையில் அமர்ந்து யோசித்தோம். அப்போதுதான், பீச்சில் சுண்டல் விற்பனை செய்ய முடிவு எடுத்தோம்.

முதலில் சுண்டல் விற்பனை செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் மிகவும் அமைதியானவன். கூவி விற்கக்கூடத் தெரியாது. சில சமயம் சுண்டல் விற்காமலேயே போய்விடும். அதை என்ன செய்வது என்று தெரியாது. வீட்டிலோ வறுமை. சரியான ஆடை கூட இருக்காது.

அதனால், அண்ணனின் ஆடையை போட்டுக் கொள்வேன். இந்த நிலையில், சுண்டல் விற்றவாறே நான் படிப்பது பள்ளியில் பலருக்கும் தெரிய வந்தது. நான் அப்போது புதுச்சேரியில் உள்ள வீரமாமுனிவர் அரசு பள்ளியில் படித்து வந்தேன். எனது நிலையை உணர்ந்த என்னுடைய ஆசிரியர்கள் பத்மாவதி, பாலசுந்தரம், ராமதாஸ் ஆகியோர் உதவி செய்தார்கள்.

சுண்டல் விற்றவாறே படித்து, 10-ம் வகுப்பில் 442 மார்க் எடுத்தேன். அதையடுத்து வஉசி அரசு மேல்நிலைப ்பள்ளியில் சேர்ந்தேன். பின்னர் மேல்படிப்பு படிக்கும் ஆசையுடன் தாகூர் கல்லூரியில் பிஏ தமிழ் சேர்ந்தேன். அதன்பிறகு, எம்ஏ, எம்பில் முடித்து விட்டு, கடந்த 2010 முதல் வைணவ சிற்றிலக்கியங்கள் பற்றி பிஎச்டி பண்றேன். 12 ஆழ்வார்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்.

படிப்புக்கு இடையே 2008-ல் நெட் தேர்விலும், 2013-ல் ஜேஆர்எப் (இளநிலை ஆராய்ச்சியாளர்) தேர்விலும் தேர்ச்சி பெற்றதால் பல்கலைக்கழகத்தில் இருந்து உதவித் தொகை கிடைக்க தொடங்கியுள்ளது. எனினும், இப்போதும் நான் சுண்டல் விற்கிறேன்.

எனது தந்தையால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால், காலையில் எழுந்து சுண்டல், வடை, பஜ்ஜிக்கு தேவையான பொருட்களை வாங்கி வீட்டில் தருவேன். எனது அம்மா அதை தயாரிப்பார். நான் பல்கலைக்கழகம் சென்று விட்டு வீடு திரும்பிய பிறகு மாலை 6 மணிக்கு மேல் சுண்டல், சமோசா, போளி, கட்லெட், பஜ்ஜி, வடை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பீச், நேரு வீதிக்கு விற்க வருவேன். விற்பனையை முடித்து விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்புவேன்.

பல்கலைக்கழக உதவித் தொகை கிடைத்தாலும் இந்த சுண்டல் வியாபாரம் மூலமாக எனது சகோதரிகள் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க முடிகிறது. என்னுடன் சுண்டல் விற்பனை செய்த எனது அண்ணன் சரவணக்குமார் தற்போது எம்ஏ, எம்பில், பிஎட் முடித்து அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். மற்றொரு அண்ணன் பாலமுருகன் பிளாட்பாரத்தில் துணி விற்கிறார்.

நமக்குள் ஆசையும், முயற்சியும் இருந்தால் நம்மை ஊக்கப்படுத்த சமுதாயத்தில் பலரும் உள்ளனர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சுண்டல் வாங்குவோர் தொடங்கி, பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நண்பர்கள் என பலரும் அளித்த ஊக்கம்தான் பிஎச்டி வரை என்னை கொண்டு வந்துள்ளது” என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் பழனிராஜ்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.