Latest News

விபத்தில் சிக்கிய காரில் 2.45 கோடி ரூபாய்! வருமானவரி துறையினர் விசாரணை!


கோவை: விபத்தில் சிக்கிய காரில் இருந்து சுமார் 2.45 கோடி ரூபாய் கைப்பற்றப் பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பாலக்காடு நான்கு வழிச்சாலையில் நேற்று காலை சேலத்தில் இருந்து கேரள மாநிலம் மலப்புரத்தை நோக்கி ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே அந்த கார் வந்து கொண்டு இருந்தபோது, எதிரே வந்த அரசு பேருந்துடன் மோதியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரினை ஓட்டி வந்த யாசர் மற்றும் அவரது நண்பர்கள் ஜாபர், ஜலீல் ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டது. மோதிய வேகத்தில் காரின் முன்பக்க கதவு திறந்து அதிலிருந்த 500 ரூபாய் நோட்டு கட்டுகள் ரோட்டில் சிதறி விழுந்தன. அந்த வழியாக வந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து வியப்பாக பார்த்தனர்.

இந்த விபத்து குறித்தும், பணம் கட்டு கட்டாக ரோட்டில் விழுந்து கிடப்பது குறித்தும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுக்கரை காவல்துறையினர் விரைந்து வந்து காயம் அடைந்த யாசர், ஜாபர், ஜலீல் ஆகிய மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காரை காவல் துறையினர் சோதனை செய்ததில் காரின் 4 பக்க கதவுகளில் ரகசிய அறை அமைத்து இருந்தது தெரியவந்தது. அந்த ரகசிய அறைகளை காவலர்கள் திறந்து பார்த்தபோது, 500 ரூபாய் நோட்டுகள் கட்டு, கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததும், அதில் இருந்து சில கட்டுகள் ரோட்டில் சிதறி விழுந்து இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காருடன், பணத்தை காவல்துறையினர் கைப்பற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.மேலும், காரில் இருந்த ஜலீல் என்பவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஈரோட்டில் உள்ள முஸ்தபா என்பவர் ஹோட்டல் வைக்க கொடுத்தனுப்பிய பணம் என்று கூறினார்.

இது பற்றி வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும், மதுக்கரை தாசில்தாருக்கும் காவல்துறையினரால் தகவல் தெரிவிக்கப்பட்டது. கட்டு, கட்டாக இருந்த ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டதில் மொத்தம் 2 கோடியே 45 இலட்சம் ரூபாய் இருந்தது. இதனை கைப்பற்றி வருமானவரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.