முத்துப்பேட்டை கடற்கரை பகுதியாகும். இங்குள்ள அலையாத்தி காடுகள் ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய அலையாத்தி காடு. அச்சுறுத்தல் நிறைந்த பகுதி என்பதால் கடலோர பாதுகாப்பு படை மற்றும் விமானப்படையின் தீவிர கண்காணிப்பு எப்போதும் இருக்கும். சமீப காலமாக விமானப்படைக்கு சொந்த மான விமானங்கள் தாழ்வாக பறந்து இப்பகுதியைக் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை சுமார் 2 அடி நீளம் 1 அடி அகலம் கொண்ட ஆள் இல்லாத ரிமோட் மூலம் இயக்கக்கூடிய சிறிய ரக விமானம் ஒன்று இப்பகுதியில் வட்டமிட்டது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த விமானம் பேட்டை செம்படவான்காடு என்ற கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகே ஒரு தென்னை மரத்தில் மோதி கீழே விழுந்தது.
அங்கு சென்று பார்த்தபோது 5கிலோ எடையுடய அந்த விமானத்தில் 4 இறக்கைகளும், அதிநவீன கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
முருகானந்தம் என்ற இளைஞர், நண்பர்களுடன் அந்த விமானத்தை எடுத்து சென்று முத்துப்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அதை முத்துப்பேட்டை டி.எஸ்.பி. கணபதியிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் நடந்த விசாரணையில் அந்த விமானம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர் தமீம் என்பவருக்கு சொந்தமானது என்றும், அவர் தனது வீட்டு மாடியில் நின்று பறக்க விட்ட போது அது கீழே விழுந்ததும் தெரிய வந்தது.
அந்த கேமரா வின் பதிவில் சிங்கப்பூரில் உள்ள பல இடங்களின் காட்சிகள் இருந்தது. எதற்காக இந்த விமானம் பறக்கவிடப்பட்டது, கேமரா பதிவின் தூரம் எவ்வளவு? விமானம் சிங்கப்பூரிலிருந்து கொண்டு வர முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment