கையால் எழுதப்பட்ட, குறைந்த பக்கங்கள் கொண்ட மற்றும் காலாவதி தேதி நெருங்கிய கடவுச்சீட்டுதாரர்களுக்கான கடவுச்சீட்டு புதுப்பிக்கும் சிறப்பு முகாம் சென்னையில் வரும் 27-ஆம் தேதி நடக்கிறது.
கையினால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகள், ஒட்டப்பட்ட புகைப்படம் கொண்ட கடவுச்சீட்டுகள் சர்வதேச அளவில் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களை வெளிநாடுகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுப்பதுடன் அத்தகையவர்களுக்கு நுழைவுச்சான்றையும் வழங்க மறுக்கிறது. எனவே, கையினால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள் வேறு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல், கடவுச்சீட்டு காலாவதியாக 6 மாதம் இருக்கும் பட்சத்தில் சர்வதேச பயணம் செய்யும் கடவுச்சீட்டுதாரர்கள் தங்கள் கடவுச்சீட்டைக் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்.
மேலும், சில நாடுகள் கடவுச்சீட்டில் இரண்டு பக்கங்களுக்கும் குறைவாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, சர்வதேச பயணிகள் வெளிநாட்டு பயணத்திற்கு முன் தங்கள் கடவுச்சீட்டைச் சோதித்து கொள்வதுடன், குறைவான பக்கங்கள் இருக்கும் பட்சத்தில் கடவுச்சீட்டைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளுக்குத் தொடர் பயணம் மேற்கொள்பவர்கள் "64 பக்கங்கள்" கொண்ட கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
இத்தகைய கடவுச்சீட்டுகள் வைத்திருப்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடவுச்சீட்டு சிறப்பு முகாம் வரும் 27-ஆம் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள "பாஸ்போர்ட் சேவா கேந்திரா"வில் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் வழங்கும் பணியும் நேற்றுமுதல் தொடங்கியது.
No comments:
Post a Comment