முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தரம் குறித்து ஆய்வு செய்ய அனுமதித்துள்ள மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். வேலூரில் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு அனுமதி அளிக்ககூடாது என தமிழக அரசு போராடி வருகிறது. ஆனால் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது கண்டிக்கதக்கது.
தமிழ்நாட்டில் நேற்று முதல் மின் கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இது சட்ட விரோதமானது. கட்டண உயர்வை அறிவித்த தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பொம்மை அமைப்பு. பொம்மை அமைப்பை உருவாக்கி தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை ஏற்க முடியாது. மின் கட்டணத்தை உயர்த்த ஒழுங்கு முறை ஆணையத்திற்கு அதிகாரமில்லை. மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். பொம்மை அமைப்பை கலைக்க வேண்டும். அதற்கு பதில் பணியில் இருக்கும் கண்டிப்பான நீதிபதியை மின்சார ஒழுங்கு முறை ஆணைய தலைவராக நியமிக்க வேண்டும்.
இந்தியாவில் மத மாற்ற தடை சட்டம் கொண்டு வரக்கூடாது. அது பொடா, தடா போன்று தவறாக பயன்படுத்தப்படும். தமிழகத்தில் நடந்த கிரானைட், மணல் போன்ற இயற்கை வளங்கள் கொள்ளை குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும். 22 தேசிய மொழிகளை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். காங்கிரசுக்கும், அதிலிருந்து வெளியேறிய ஜி.கே.வாசனுக்கும் கொள்கை அளவில் வித்தியாசமில்லை. இருவருமே காமராஜர் ஆட்சி என்ற நோக்கத்தில் செயல்படுகின்றனர். இளங்கோவன், ஜி.கே.வாசன் இருவரும் தங்கள் கொள்கையில் இருந்து பின்வாங்க கூடாது. தி.மு.க. அ.தி.முக. கட்சிகளோடு கூட்டணி அமைக்காமல் இருந்தால் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி என்பது சாத்தியப்படும். 2016ல் பா.ம.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். மாற்று அணி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். பா.ம.க.வை தலைமையேற்று வரும் எந்த கட்சியாக இருந்தாலும் கூடட்டணியில் சேர்த்துக்கொள்வோம். வேலூர் மாவட்டத்தை வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 ஆக பிரிக்கவேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.


No comments:
Post a Comment