Latest News

கம்பியால் அடித்து துன்புறுத்தினர்’ இலங்கை சிறையில் சித்ரவதை ஊர் திரும்பிய மீனவர்கள் கதறல்


இலங்கை சிறையில் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானதாக, தமிழகம் திரும்பிய மீனவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 38 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே போல் கடந்த 9ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 14 பேர், காரைக்கால் மீனவர்கள் 29 பேர் உள்பட 43 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.81 மீனவர்களை விடுவிக்க கோரியும், இலங்கை வசம் உள்ள 87 விசைபடகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும் நாகை உள்பட 5 மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழக மீனவர்கள் 66 பேரையும் விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டது.

விடுதலை செய்யப்பட்ட 66 மீனவர்கள், நேற்று கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டு சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கிருந்து விஸ்வாஸ் கப்பல் மூலம் 66 மீனவர்களும் அழைத்து வரப்பட்டனர். இரவு 10.30 மணி அளவில் கப்பல் காரைக்கால் வந்தடைந்தது. மீனவர்கள் வருகையையொட்டி துறைமுகத்தில் அமைச்சர் ஜெயபால், கலெக்டர் முனுசாமி, மீன்வளத்துறை இணை இயக்குனர் சுப்புராஜ் மற்றும் அந்தந்த பகுதி மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களின் குடும்பத்தினர் 100க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். கப்பல் வந்ததும் அமைச்சர் ஜெயபால், கலெக்டர் முனுசாமி ஆகியோர் சால்வை அணிவித்து மீனவர்களை வரவேற்றனர். பின்னர் அவர்களுக்கு உணவு, உடை வழங்கப்பட்டது. உறவினர்கள் கண்ணீர் மல்க மீனவர்களை வரவேற்றனர். அங்கு சட்ட நடைமுறைகளை முடித்த பின், 66 மீனவர்களும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறையில் கொடுமைஊர் திரும்பிய மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதும் நாங்கள் பயங்கர இன்னல்களுக்கு ஆளானோம். அவர்கள் எங்களை அடித்து உதைத்ததில் சிலருக்கு கை முறிந்தது. மாவு கட்டுபோட்டு தேறினோம். எங்களை இரும்பு கம்பியால் தாக்கி சந்தோஷப்படுவார்கள். கழிவறைகளை சுத்தம் செய்ய நிர்பந்தம் செய்தனர். இதை வெளியே சொன்னால் விடுதலையை தாமதப்படுத்துவோம் என மிரட்டினர். அடித்து துன்புறுத்தும்போதெல்லாம் சுருண்டு விழுந்து அழுதோம். எங்களை இலங்கை ராணுவம், போலீசார் தினமும் கொடுமைப்படுத்தினர்‘ என்று கண்ணீரோடு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.