வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலை கிடைக்க காத்திருப்போர் எண்ணிக்கையில் முதலிடம் என்ற ‘பெருமை‘யை பெற்றுள்ளது தமிழகம்.
படித்து முடித்தவுடன் நல்ல வேலைக்கு சேரவேண்டும் என்பதுதான் எல்லா இளைஞர்களின் கனவு. அதிலும், அரசு வேலைக்கு ஆசைப்படாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். ஆனால், திறமை படைத்தவர்களாக இருந்தும் அதற்கேற்ற வாய்ப்புகள் இன்றி அல்லாடுவது கொடுமையான விஷயம். இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போர் பட்டியல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தொழிலாளர் அமைச்சகம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், நாடு முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 4.47 கோடி பேர் காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில வாரியாக புள்ளிவிவரங்கள் இடம்பெற்றிருந்தன. மாற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 77 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்துக்கிடக்கின்றனர் என்கிறது அந்த புள்ளிவிவரம். காத்திருப்போர் எண்ணிக்கையில் 70.48 லட்சம் பேர் கொண்ட மேற்கு வங்கம் 2வது இடத்திலும், 60.70 லட்சம் பேர் பதிவு செய்து உத்தர பிரதேசம் 3வது இடத்திலும் உள்ளன.
அண்டை மாநிலமான கேரளாவில் 38 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். அரசு பணியில் மீதான மோகம் இன்றைக்கும் இளைஞர்களிடம் உள்ளது. சில நூறு பணியிடங்களே அறிவிக்கப்பட்டாலும், அதற்கு ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் குவியும் விண்ணப்பங்களே இதற்கு சாட்சி. இதனால்தான் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, அதை முறையாக புதுப்பிக்கவும் செய்கின்றனர். இதுஎல்லாமே, என்றோ ஒருநாள் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். தமிழகத்தின் உண்மை நிலையோ இந்த நம்பிக்கைக்கு வேட்டு வைப்பதாக உள்ளது. அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. குறிப்பாக கல்வித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, காவல்துறை போன்ற மக்கள் பணியில் நேரடி தொடர்புடையவை கூட கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. பொதுப்பணித்துறையில் 400 காலியிடங்கள் இருந்தாலும், 202 பணியிடங்களுக்கும் மட்டும் தேர்வு முடிந்து, கவுன்சலிங் நிறைவுற்ற பிறகும் பணி ஆணை வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக, தேர்வு எழுதியவர்கள் புலம்புகின்றனர். இதுபோல், நெடுஞ்சாலை துறையில் 250 உதவி பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
துறைதோறும் பணியிடங்கள் காலியாக இருந்தாலும், இருப்பவர்களை வைத்து சமாளிப்பது ஊழியர்களின் பணிச்சுமையை அதிகரிக்குமே தவிர பலன் ஒன்றும் ஏற்படப்போவதில்லை. அரசு நிறுவனங்களில் கோப்புகள் தேங்கிக்கிடப்பதற்கும், பணிகளில் மந்தநிலை நிலவுவதற்கும் ஊழியர் பற்றாக்குறையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. மக்கள் தொகை பெருகிய பிறகு அவர்களுக்கு ஏற்ற விகிதாசாரத்தில் அரசு ஊழியர்களை நியமிக்க வேண்டும். தேவைக்கேற்ப புதிய சேவைகளை அறிமுகப்படுத்த வேண்டும். அப்போது தற்போதைய காலி பணியிடம் மட்டுமின்றி புதிய பணியிடங்களும் உருவாகும். இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு அரசு வேலை கிடைப்பதோடு, மக்கள் சேவைகளையும் தடையின்றி நிறைவேற்ற முடியும். ஆனால் 1947ம் ஆண்டு அரசு துறைகளில் எந்த முறை கடைப்பிடிக்கப்பட்டதோ, அதேபோல்தான் இப்போதும் செயல்பட்டு வருகிறது. காலத்துக்கேற்ப வடிவமைப்புகளையும் செயல்பாடுகளையும் மாற்றவேண்டும் என்று அரசு துறையில் உள்ள சிலரே புலம்புகின்றனர்.
வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தவர்களில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிப்படிப்பை பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 55 லட்சத்தை தாண்டும். இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு 6 லட்சத்துக்கு மேற்பட்டோர், முதுகலை படித்தவர்கள் 2 லட்சத்துக்கு மேலும் பதிவு செய்துள்ளனர். இதுபோல், இளநிலை பொறியியல் படிப்பில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோரும், மருத்துவம், கால்நடை மருத்துவம் ஆகியவற்றில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் பதிவு செய்துள்ளனர். அரசு வேலை இனிமேல் கிடைக்காது என்ற விரக்தியில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் ஏராளம். அவர்களையும் கணக்கில் எடுத்தால் இந்த எண்ணிக்கை எங்கேயோ போய்விடும்.
கோரிக்கை இங்கே செயல்பாடு எங்கே
கல்வித்துறை தொடங்கி பல்வேறு துறை அரசு ஊழியர்களும் ‘காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்’ என்று கோஷமிட்டு அவ்வப்போது போராட்டங்கள் நடத்துகின்றனர். இது ஒரு புறம் இருக்க, வேலைக்கு காத்திருப்போர் எண்ணிக்கையும் ஒவ்வொரு கல்வியாண்டின் முடிவிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்களும், அரசு துறை அதிகாரிகள் சிலரும் கூறுகையில், ‘‘தொழிற்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தமிழக அரசு கூறுகிறது. அப்படியானால் அந்தந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு புதிய பணியிடங்கள் உருவாகியிருக்க வேண்டும். அல்லது தேவைக்கேற்ப காலி பணியிடங்களை நிரப்பியிருக்க வேண்டும். செலவு குறைப்பு என்று கருதியோ, அலட்சியம் காரணமாகவோ பணியிடங்களை நிரப்பாமல் இருந்தால் அது மக்கள் சேவைக்கு மட்டுமல்ல, வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் நம்பிக்கைக்கும் எதிராக அமைந்து விடும். எனவே, குறைந்தபட்சம் மக்களோடு நேரடி தொடர்புடைய துறைகளிலாவது முதலில் கவனம் செலுத்தி பணிகளை விரைவு படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த வடிவேலு என்பவர் தொழில்நுட்ப படிப்பு முடித்து மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1987ம் ஆண்டு பதிவு செய்திருந்தார். கொஞ்சமும் தவறாமல், எதற்கும் சோர்ந்துவிடாமல் பதிவை புதுப்பித்து வந்த அவருக்கு, 2012 மத்தியில் 58 வயதில் அரசு வேலைக்கான நியமன கடிதம் கிடைத்தது. பின்னர் 10 மாதங்கள் கழித்து பணி ஓய்வு பெற்றார். அரசு வேலை கிடைத்தது என்ற மகிழ்ச்சியை விட இதில் சோகம்தான் அதிகம். 10 மாதம் பணியாற்றிய அவருக்கு மற்ற அரசு ஊழியர்களுக்கான முழுமையான பலன் எதுவும் கிடையாது. அரசு பணியாளராக இருந்தார் என்ற பெருமையை தவிர அவருக்கு எதுவுமே மிஞ்சவில்லை.


No comments:
Post a Comment