நாகர்கோவிலை சேர்ந்த பட்டதாரி ஒருவர் பண ஆசையால் பாதை மாறி மூன்று பேரை கொலை செய்துள்ளார்.
நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடத்தை சேர்ந்த சுங்க இலாகா ஊழியர் சுப்பையா, அவரது மனைவி வசந்தி, மகள் அபிஸ்ரீ ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மெரின் என்ற ராஜேந்திரன்( 29) என்பவரை பொலிசார் கைது செய்தனர்.
சுப்பையாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த இவர் ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரி ஆவார்.
இவர் இந்த மூன்று கொலைகளை செய்ததற்கான காரணம் என்னவென்று விசாரித்தபோது சில உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெரினின் தந்தை ரேசன் கடையில் உதவியாளராக பணியாற்றியவர். இவருக்கு ஒரு அண்ணன், ஒரு அக்காள் உண்டு. இளம்வயது முதலே மெரின் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டுள்ளார்.
கல்லூரி படிப்பு முடிந்து மதுரையில் பி.எட். படிக்கும் போது மெரினுக்கு திருச்சியை சேர்ந்த ஒரு நண்பருடன் பழக்கம் கிடைத்தது. அவர் மெரினிடம் பங்குசந்தை தொழில் பற்றியும், அதில் அதிக லாபம் கிடைப்பது பற்றியும் கூறி ஆசை காட்டி இருக்கிறார்.
இதைக்கேட்ட மெரின் குறுகிய காலத்தில் அதிக பணம் கிடைக்கும் பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினார்.
முதலில் சிறிய முதலீட்டை தனது நண்பரிடம் கொடுத்தார். அவர் அந்த பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து சில மாதங்களிலேயே பணத்தை இரட்டிப்பாக்கி மெரினிடம் கொடுத்துள்ளார். இது மெரினுக்கு அளவில்லா சந்தோஷத்தை கொடுத்தது.
குறுகிய காலத்தில் கோடீஸ்வரான ஆசைப்பட்ட மெரின் அடுத்தக்கட்டமாக தனது நெருங்கிய உறவினர் ஒருவரிடம் இருந்து ரூ.5 லட்சத்தை வாங்கி நண்பரிடம் கொடுத்தார். ஆனால் இம்முறை பங்கு சந்தை ஏமாற்றி விட்டது.
வெளிநாட்டு கம்பெனி ஒன்றில் முதலீடு செய்திருந்தேன், அது இப்போது நஷ்டத்தில் இருப்பதால் பணம் போய் விட்டது, இன்னும் கொஞ்சம் பணம் கொடு, வேறு நிறுவனத்தில் முதலீடு செய்து இழந்த பணத்தை இரு மடங்காக சீக்கிரமே திரும்ப எடுத்து விடலாம் என ஆசை காட்ட அதையும் மெரின் நம்பி உள்ளார்.
இந்த நேரத்தில் தான் மெரினின் தந்தை பணி ஓய்வு பெற்ற வகையில் ரூ.9 லட்சம் கிடைத்துள்ளது. அந்த பணத்தையும், இன்னும் சிலரிடம் இருந்து கடன் வாங்கியும் மொத்தம் ரூ.20 லட்சம் வரை பணத்தை தயார் செய்து நண்பரிடம் கொடுத்துள்ளார்.
அதை பெற்றுக் கொண்ட நண்பரும் பங்குசந்தையில் முதலீடு செய்துள்ளார். ஆனால் பல மாதங்களாகியும் மெரினுக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை.
மாறாக, பணம் வாங்கிய நண்பர் ஏற்கனவே இதுபோல பல பேரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றியிருப்பதும், அவர்கள் பணத்தை திருப்பி கேட்டு டார்ச்சர் கொடுத்ததால் தலைமறைவாகி இருப்பதும் தெரிய வந்தது. இதையறிந்த மெரின் அதிர்ச்சியடைந்தார்.
பங்கு சந்தை நண்பரை நம்பி ரூ.25 லட்சம் ஏமாந்து விட்டோமே, இனி இந்த பணத்தை எப்படி சம்பாதிப்பது? பணம் கொடுத்தவர்களுக்கு என்ன பதில் சொல்வது? என்று தடுமாறிக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் தான் மெரினுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த சுங்க இலாகா ஊழியர் சுப்பையாவுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. மெரினிடம், சுப்பையா தனது குடும்ப விஷயங்கள் அனைத்தையும் கூறி உள்ளார்.
தன்னிடம் உள்ள சொத்து விவரங்களை சுப்பையா கூறியதை கேட்டு மெரின் அதிர்ச்சியடைந்தார். ஒரு அரசு ஊழியர் எப்படி இவ்வளவு சொத்துக்களை வாங்கி குவித்தார்? அவரிடம் ஏராளமான பணம் நகை, இருக்க வேண்டும் என மெரின் நினைத்தார்.
அதற்கேற்றாற்போல சுப்பையா வீட்டில் தங்க பிஸ்கட்டுகள் இருப்பதாக மெரினுக்கு தகவல் கிடைத்தது. எனவே சுப்பையாவிடம் இருக்கும் நகை, பணத்தை கொள்ளையடித்து தனது கடனை அடைத்து விடலாம் என திட்டம் தீட்டி அதன்படி 3 பேரையும் கொலை செய்துள்ளார்.
முதலில் சுப்பையாவை கொலை செய்து உடலை முப்பந்தல் அருகே முட்புதருக்குள் வீசி உள்ளார்.
அதுபோல, வசந்தியையும், குழந்தை அபிஸ்ரீயையும் கொலை செய்த போது பொலிசாரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக வீட்டில் இருந்து 15 பவுன் நகையையும் எடுத்து சென்றிருக்கிறார்.
ஆனால் பொலிசார் திறமையாக துப்பு துலக்கி மெரினை கைது செய்துள்ளனர்.
அதிக பணத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டதே மெரினை இன்று கொலைகாரனாக மாற்றி உள்ளது.
தன்னை கைது செய்த பொலிசாரிடம் தெரியாமல் கொலை செய்து விட்டேன், என அழுது புலம்பிக் கொண்டே இருந்துள்ளார், ஒரு கட்டத்தில் மனம் வெதும்பி என்னை கொன்று விடுங்கள் என்றும் புலம்பியுள்ளர்.
கைது செய்யப்பட்ட மெரினை பொலிசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்துள்ளனர்.
No comments:
Post a Comment