தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு முறை மின் கண்டன உயர்வு செய்யப்பட்டுள்ளதற்கு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நேற்று முதல் 15 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. ஏற்கனவே மின் கட்டண உயர்வுக்கான உத்தேச பட்டியல் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.அப்போதே திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், உத்தேச கட்டணத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி: புலி வருகிறது! “புலி வருகிறது!“ என்று கடந்த சில மாதங்களாக மிரட்டி கொண்டிருந்த “மின் கட்டண உயர்வு“ உண்மையில் வந்தே விட்டது. இந்த மின் கட்டண உயர்வு பற்றி“ ஆங்கில நாளேட்டில்“ மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்குள்ளேயே கடுமையான பிளவு, ஒழுங்கு முறை ஆணையத்தின் உறுப்பினரே ஆணையத்தின் பெயரால் யாரோ ஒருவர் மின் கட்டண உயர்வுக்கான உத்தரவைப் பிறப்பிக்கிறார்“ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒழுங்கு முறை ஆணையத்தின் உறுப்பினர் நாகல்சாமி, கட்டண உயர்வு குறித்து நாங்கள் எப்போதும் விவாதித்தது கிடையாது. ஒழுங்குமுறை ஆணையத்தின் எந்தக் கடிதத்திற்கும் மின்வாரியம் பதிலளிக்கவில்லை என் றெல்லாம் கூறியதாக தெரிவித்திருக்கிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இந்த மின் கட்டண உயர்வு ஒழுங்கு முறை வாரியத்தின் முழு ஒப்புதலையே பெறாமல், தன்னிச்சையாக அரசால் வலியுறுத்தப்பட்டு ஒழுங்கு முறை வாரியத்திலே உள்ள ஒரு சிலரால் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதோ என்று தோன்றுகிறது. இரண்டாவது முறையாக தற்போது உயர்த்தப்பட்டுள்ள இந்த மின் கட்டண உயர்வை அதிமுக அரசு முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென்று திமுக சார்பில் வலியுறுத்துகிறேன்.
விஜயகாந்த்(தேமுதிக தலைவர்): தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தானாகவே முன்வந்து மின்கட்டணம் மற்றும் மின் செலுத்துதல் கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தமிழக அரசின் பசுத்தோல் போர்த்திய புலியின் செயலாகத்தான் பார்க்க முடிகிறது. ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வரலாறு காணாத வகையில் கடுமையாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விவசாயிகள், சிறு வணிகர்கள், சிறு, குறு தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை தமிழக அரசு சிந்தித்து பார்த்து உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்: தமிழகத்தில் ஏற்கனவே மின் வெட்டினால் இருளில் மூழ்கிய தமிழகம் இன்று மின் கட்டண உயர்வால் ஏழைகள், தொழிலாளர்களின் வாழ்வில் இருள் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: மின்திருட்டு, வெளிமாநிலங்களில் மின்சாரம் வாங்குவதை சரி செய்தாலே மின் கட்டணத்தை உயர்த்தியிருக்க தேவையில்லை. கருத்து கேட்பு கூட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்று மக்கள் தெரிவித்தனர். அதற்கு எதிராக உயர்த்தப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல. எனவே, கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் சுமார் ரூ.5,447 கோடிக்கு மின்கட்டணத்தை உயர்த்திய மின்வாரியம் மற்றும் ஒழுங்குமுறை ஆணைய நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. மின் வாரியத்தில் நடக்கும் ஊழல்களால் ஏற்படும் இழப்பை கட்டண உயர்வு என்ற பெயரில் அப்பாவி மக்கள் தலையில் சுமத்துவதை ஏற்க முடியாது. இதனால் அனைத்துப் பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரித்து மக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்படுத்தும். இதை உணர்ந்து மின்கட்டண உயர்வை அரசு முழுமையாக திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
வைகோ (மதிமுக பொது செயலாளர்): மின் கட்டண உயர்வை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தமிழக மின் சார வாரியத்தின் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யாமல் இருந்தது, மின் உற்பத்தித் திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்றத் தவறியது மற்றும் தனியார் மின் நிறுவனங்கள் மூலம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது போன்ற காரணங்களால் தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து நட்டம் ஏற்பட்டு, வீழ்ச்சி அடைந்து வருகிறது. அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள நட்டத்தை மக்கள் மீது ஏற்றுவதை ஏற்க முடியாது.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): 500 யூனிட் வரை மானி யம் ஆறுதல் அளிக்கிறது. ஆனால் மத்திய அரசின் வழியைப் பின்பற்றி மானியங்களை முற்றிலும் ஒழிப்பதற்கான துவக்கமே இது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே கட்டண உயர்வைக் கைவிட வேண்டும்.
திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்): விலைவாசி உயர்வால் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் மின் கட்டண உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது. ஏழை எளிய மக்களைச் சுரண்டி வருமானத்தைப் பெருக்கும் மின்வாரியத்தின் இந்த நடவடிக்கை ஏற்புடையதில்லை. கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். இதே போல, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், எஸ்.டி.பி.ஐ மாநில தலை வர் எம்.தெகலான் பாகவி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், கொங்கு நாடு ஜனநாயக கட்சி தலைவர் நாகராஜ், உள்ளிட்டோரும் மின் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment