அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய நானாவதி தலைமையிலான விசாரனை கமிஷன், குஜராத் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளது.
குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 6 கோச் பெட்டி தீ விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து குஜராத்தில் மதக் கலவரம் மூண்டது. இதில் சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இவர்களில் ஏராளமானோரின் வீடு, கடைகள் உள்ளிட்ட சொத்துகள் சூறையாடப்பட்டன. பலர் அகதிகளாயினர்.
கலவரம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி நானாவதி, நீதிபதி அக்ஷய் மேத்தா ஆகியோர் அடங்கிய விசாரணை கமிஷன் நேற்று தனது அறிக்கையை முதல்வர் ஆனந்தி பென் படேலை அவரது இல்லத்தில் சந்தித்து அளித்தது.
2002ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக நானாவதி தாக்கல் செய்த 2,000 பக்க அறிக்கையில், பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் பேர் அளித்த வாக்குமூலங்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் பாண்டே, ஸ்ரீகுமார், ராகுல் சர்மா, சஞ்சீவ் பட் மற்றும் முன்னாள் மாநில உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் அளித்த சாட்சியங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 2002ல் பிப்ரவரி 27 தொடங்கி மே 31 வரையிலான 3 மாதத்திற்குள் 4,160 வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை குறித்த விவரங்களை வெளியிட நானாவதி மறுத்துவிட்டார். இருந்த போதிலும் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டிருந்தால் கலவரங்களை தடுத்திருக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் இந்த அறிக்கையை முன்பே தாக்கல் செய்திருக்க முடியும். ஆனால், கலவரம் தொடர்பான தகவல்களை எங்களுக்கு அளிக்க சிறப்பு புலனாய்வு படை தொடர்ந்து மறுத்து வந்தது. சிறப்பு புலனாய்வு படையில் இடம்பெற்றிருந்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் அடிக்கடி உயர் நீதிமன்றம் சென்று தடை வாங்கிக் கொண்டு இருந்தார். அதனால் தான் அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஏற்பட்டது என்று நீதிபதி நானாவதி தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment