Latest News

முணு முணுப்பு

மனிதனின் வாழ்வினிலே
மாறாத பழக்கமாய்
மடியும் வரை தொடர்ந்திடுமாம்
மனத்தினிலே நிலைபெறுமாம்
முணுமுணுப்பு

சினங்கொண்ட பகையோரும்
சீண்டிய நம் உறவுகளும்
புறம்பேசி முணுமுணுப்பர்
பொல்லாங்கு செய்ய நினைப்பர்

இனம்கண்ட தவறுகளும்
எதிர்கொண்ட இகழ்வுகளும்
பணம் கொண்டு மறைந்து விடும்
புகையாகி முணுமுணுக்கும்

அன்பான சிநேகிதமும்
அளவு கூடி விலகிவிட்டால்
வம்பாகி முணுமுணுக்கும்
வசைபாடி வினையாகும்

ஆதிக்கம் செலுத்துவோரும்
சாதிக்க நினைப்போரும்
சோதனையால்முணுமுணுப்பர்
சோர்ந்து மனக் கவலைகொள்வர்

ஊதாரியாய் அலைந்தால்
ஊரார்கள் முணுமுணுப்பர்
உதவாக்கரையென
உறவார்கள் தூற்றிடுவர்

நாதாரியாய் இருந்தால்
நம்பியவர் சபித்திடுவர்
போதாதகாலமென - மனம்
புண்ணாகி முணுமுணுப்பர்

நாளெல்லாம் முணுமுணுத்து
நகர்ப்புரத்தை வலம்வருவோர்
நா ருசிக்க உணவுண்பர்
நடிப்பினிலே உலகைவெல்வர்

அனுதினமும் முணுமுணுத்தால்
அருகிலுள்ளோர் விலகிடுவர்
ஆகாயம் முணுமுணுத்தால்
அந்தி - மழைவந்து மகிழ்ந்திடுவர்

முணுமுணுப்பில் பலதும் உண்டு
முகமறியா நலமும் உண்டு
கணக்கில்லா முணுமுணுப்பில்
காரியமும் கெடுவதுண்டு

தனக்குள்ள பழக்கத்தை
தரமாக்கி வாழ்தல் நலமே
முகம் சுழிக்கா முணுமுணுப்பை
முறையாக அறிதல் உயர்வே

நன்றி : காக்கா
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.