பெங்களூருவில் நள்ளிரவு, காரில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்த இளம்பெண்களை கத்தி முனையில் கடத்த முயன்ற வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கத்திமுனையில் கடத்த முயற்சி
பெங்களூரு இந்திரா நகரை சேர்ந்த இளம்பெண் கஸ்தூரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 22–ந் தேதி(சனிக்கிழமை) இரவு 11.50 மணி அளவில் எம்.ஜி. ரோட்டில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் கடை முன்பு தனது தோழி ஒருவருடன் காரில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேனில் வந்த 4 பேர், கார் அருகே வந்து இறங்கி உள்ளனர். பின்னர் அவர்கள் கஸ்தூரியையும் அவரது தோழியையும் நீண்ட நேரம் நோட்டம்விட்டுள்ளனர். பெண்கள் இருவரும் காரில் தனியாக வந்து இருப்பதை அறிந்த அவர்கள், திடீரென தங்கள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவர்களை கடத்த முயன்றுள்ளனர்.
மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள், உடனடியாக கார் கதவை உள்புறமாக தாழிட்டு கூச்சலிட்டுள்ளனர். மேலும் அந்த பெண்கள், மர்மநபர்களை காரில் இருந்தபடியே தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இதற்கிடையே சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதனால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இளம்பெண்களை கத்தி முனையில் கடத்த முயன்ற சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கப்பன் பார்க் போலீசில், கஸ்தூரி புகார் கொடுத்தார். மேலும் அவர் தன்னிடம் இருந்த செல்போன் படக்காட்சியையும் போலீசாரிடம் ஒப்படைத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய துணை போலீஸ் கமிஷனர் சந்தீப்பாட்டீல் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.
6 பேர் கைது
இந்த நிலையில், இளம்பெண்களை கத்தி முனையில் கடத்த முயன்றதாக பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியை சேர்ந்த விற்பனை பிரதிநிதி நாகேஷ், கூலி தொழிலாளி தேவராஜ், ஆர்.டி.நகரை சேர்ந்த கார் டிரைவர் ஹரிஷ் மற்றும் தமிழ்நாடு ஓசூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் கிரண், கார் டிரைவர் சதீஷ், மளிகை கடைக்காரர் சுப்பிரமணி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் எதற்காக இளம்பெண்களை கடத்த முயன்றனர்? இதேபோல வேறு ஏதேனும் குற்ற வழக்கில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று கப்பன் பார்க் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment