Latest News

தமிழகத்தில் 74.31 சதவீதம் பேர் பதிவு: ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தீவிரம்


தமிழகத்தில் 74.31 சதவீதம் பேர் ஆதார் அடையாள அட்டை பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு வசதியாக தமிழகம் முழுவதும் 367 நிரந்தர மையங்கள் செயல்படத்தொடங்கியுள்ளது.

4 கோடியே 73 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை
மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறை இணை இயக்குனரும், ஆதார் அடையாள அட்டை கட்டுப்பாட்டு அதிகாரியுமான எம்.ஆர்.வி.கிருஷ்ணா ராவ் ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியதாவது:–

தமிழகத்தில் கடந்த 2010–ம் ஆண்டு வீடு, வீடாக சென்று தகவல் சேகரிக்கப்பட்டது. இதன்படி 7 கோடியே 11 லட்சம் பேர் உள்ளனர். இதில் ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக (5 வயதுக்கு மேல் உள்ளவர்கள்) 6 கோடியே 74 லட்சம் பேர் உள்ளனர்.

இவர்களில் 5 கோடியே 1 லட்சம் பேரிடம் தகவல் சேகரிக்கப்பட்டு, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 74.31 சதவீதம் பதிவு ஆகும். தகவல் பதிவு செய்யப்பட்ட 5 கோடியே ஒரு லட்சம் பேரில் 4 கோடியே 73 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு வினியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நிரந்தர மையங்கள்
ஆதார் அடையாள அட்டை பெற புதிதாக விண்ணப்பிப்பவர்கள், ஏற்கனவே விண்ணப்பித்து புகைப்படம் எடுக்க தவறியவர்கள், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 2–ம் கட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

மேலும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தமிழகம் முழுவதும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு வசதியாக 470 நிரந்தர மையங்கள் அமைக்க முடிவெடுத்துள்ளன. அதன்படி தற்போது வரை 367 நிரந்தர மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 51 நிரந்தர மையங்கள்
மீதம் உள்ள 103 நிரந்தர மையங்கள் தமிழகத்தில் விரைவில் தொடங்கப்படும். சென்னையை பொருத்தமட்டில் 51 ஆதார் அட்டை நிரந்தர மையங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டு, 43 நிரந்தர மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 8 நிரந்தர மையங்கள் மக்களின் வசதிக்காக விரைவில் தொடங்கப்படும்.

மாநகராட்சிகள் செயல்படும் நகரங்களில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி யூனிட் அலுவலகங்களிலும், பிற பகுதிகளில் தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் அட்டை நிரந்தர மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. நிரந்தர மையங்களில் புகைப்படம் எடுத்தல், கைரேகை மற்றும் கண்விழித்திரை பதிவுகளையும் உடனடியாக மேற்கொள்ளும் வசதி மற்றும் வாய்ப்புகள் உள்ளது.

ரசீது தொலைந்தாலும் விண்ணப்பிக்கலாம்
இந்த மையங்களில் புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆர்வத்துடன் வந்து பதிவு செய்து வருகிறார்கள். நிரந்தர மையங்களில் தகவல்களை பதிவு செய்வதற்காக, ஒப்பந்த ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை அதிகாரிகளால் வழங்கப்பட்ட ரசீது பொதுவாக காண்பிக்கப்பட்டுவருகிறது. இந்த ரசீதை தொலைத்துவிட்டாலும் ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்யலாம். ஆகையால் பொதுமக்கள் யாரும் குழப்பம் அடையவேண்டிய அவசியம் இல்லை.

புதிதாக விண்ணப்பிப்பது எப்படி?
நிரந்தர மையங்களில் வழங்கப்படும் விண்ணப்பத்தில் தங்களை பற்றிய விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்து புதிதாக பதிவு செய்யவேண்டும். பின்னர் அந்த மையத்திலேயே கைரேகை பதிவு செய்து, புகைப்படம் எடுத்து ஆதார் அட்டைக்கு பதிவு செய்யப்படும்.

புதிதாக விண்ணப்பிப்பவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள நிரந்தர மையங்களில் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுக்கும் இதே முறைதான் பின்பற்றப்படும். 5 வயது நிரம்பிய குழந்தைகள், தங்கள் குடும்பத்தில் ஏற்கனவே ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்களின் தகவல்களை இணைத்து விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

நடவடிக்கை
பயனாளிகளுக்கு அனுப்பப்பட்ட ஆதார் அட்டை சில பகுதிகளில் தபால் துறை ஊழியர்களால் சரிவர ஒப்படைக்கப்படவில்லை என்று புகார்கள் வெளியாகி உள்ளது. இவ்வாறு புகார்கள் எழும் இடங்களில் சம்பந்தப்பட்ட தபால் துறை உயர் அதிகாரிகளின் உதவியோடு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.