Latest News

குடும்ப தகராறில் 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் தள்ளி கொன்ற தாய்


பெற்றோர் முன்னிலையில் கணவர் அடித்ததால் மனமுடைந்த இளம்பெண் நான்கு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். எனினும் கணவர் தூங்கிய பிறகு தன் இரு குழந்தைகளை குடிநீர் தொட்டியில் வீசி கொன்றுவிட்டு மீண்டும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோழிங்கநல்லூரில் சோகத்தை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் சல்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அமித்குமார் (30). சிறுசேரியில் உள்ள ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூனம் (26). இவர்களுக்கு கீத் (5), அம்சி (3) என்ற மகள்கள் இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த இவர்கள், சோழிங்கநல்லூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். இங்குள்ள தனியார் பள்ளியில் கீத் யுகேஜியும், அம்சி பிரிகேயும் படித்து வந்தனர். இந்நிலையில், சொந்த ஊர் சென்றுவிட்டு சில தினங்களுக்கு முன் சென்னை வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டனர். நேற்று காலை பெட்ரூமில் சத்தம்கேட்டு அமித்குமார் எழுந்து வந்து பார்த்துள்ளார். அப்போது, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள பூனம் முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அமித்குமார், தடுத்து நிறுத்தி குழந்தைகளை பற்றி கேட்டுள்ளார். பதில் எதுவும் சொல்லவில்லை. பூனத்தை அடித்து உதைத்து கேட்டுள்ளார். அதன்பிறகு வீட்டின் பின்புறமுள்ள கீழ்நிலை குடிநீர் தொட்டியில் இருவரையும் தள்ளி கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். இதையறிந்து அப்பகுதி மக்கள் திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வந்தனர். குழந்தைகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கணவன், மனைவி இருவரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் பூனம் கூறியது:
அமித்குமார் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வார். சொந்த ஊர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்ப புறப்பட்டோம். விமான நிலையம் வருவதற்கு நான் கிளம்ப தாமதமானதால், என் பெற்றோர் முன்னிலையில் என்னை அடித்து உதைத்தார். பின்னர் இருவரின் பெற்றோரும் எங்களை சமாதானம் செய்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்ததும் மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்தார். இதனால் மனமுடைந்த நான் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றபோது தடுத்துவிட்டார்.

அதன்பிறகு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றேன் அதையும் தடுத்துவிட்டார். கத்தியால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றேன் அதையும் தடுத்து சமாதானம் செய்தார். நேற்று முன்தினம் இரவு தூங்கிவிட்டார். இரவு முழுவதும் தூங்காமல் இருந்தேன். நான் இறந்துவிட்டால் குழந்தைகள் கஷ்டப்படுவார்கள் என நினைத்து இருவரையும் அழைத்து சென்று வீட்டின் பின்புறமுள்ள குடிநீர் தொட்டியில் தள்ளி கொன்றேன். பின்னர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை கடற்கரைக்கு சென்று தற்கொலைக்கு முயன்றேன். அப்பகுதி மக்கள் மீட்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றபோது கணவர் தடுத்துவிட்டார். இவ்வாறு கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.