தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சென்னை சூளைமேட்டை சேர்ந்த ராஜேந்திரன் (61) என்பவர் நேற்று (வெள்ளிக்கிழமை) வேப்பேரி ரித்தர்டன் சாலை வழியாகச் சென்றுள்ளார். அப்போது, அவரது எதிரே வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண், தான் ஒரு பெண் காவலர் என்று கூறியதுடன், ராஜேந்திரன் அவரை பாலியல் நோக்கத்துடன் பார்த்ததாகக் கூறியுள்ளார். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன ராஜேந்திரன், தான் அந்த நோக்கத்துடன் பார்க்கவில்லை என்றும் தயவுசெய்து விட்டு விடுங்கள் என்றும் கெஞ்சியுள்ளார். இருப்பினும் அந்தப் பெண், ‘காவல் நிலையம் வாருங்கள் இல்லை என்றால் அபராதமாக ரூ.10 ஆயிரம் கொடுங்கள். நான் அதை நீதிமன்றத்தில் கட்டி விடுகிறேன்’ என்று அதிகார தோரணையில் பேசி உள்ளார்.
அவரிடம் இருந்து தப்பிக்க ராஜேந்திரன், தன்னிடம் இருந்த ரூ.10ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதன் பின்னரே அந்தப் பெண் ராஜேந்திரனை விடுவித்துள்ளார். பின்னர், நடந்த சம்பவம் குறித்து வேப்பேரி காவல் நிலையம் சென்று ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அப்போதுதான் பணம் பறித்துச் சென்ற பெண், காவலர் இல்லை வழிப்பறி செய்பவர் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து வேப்பேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை வாசிகள் இது போல உங்களிடம் யாராவது நடந்து கொண்டால் கவனமாக இருந்து கொள்ளுங்கள் .இந்த தகவலை உங்களுடைய நண்பர்களுக்கு சொல்லுங்கள் விழிப்புணர்வாக
No comments:
Post a Comment