ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுத்த கர்நாடக ஹைகோர்ட் நீதிபதியை காரில் தொடர்ந்து சென்று வீடியோ பிடித்த நபரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரது ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடக ஹைகோர்ட்டில் நீதிபதி சந்திரசேகரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் வாத பிரதிவாதங்களை கேட்ட நீதிபதி சந்திரசேகரா, ஊழல் என்பது மனித உரிமைக்கு எதிரான செயல் என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்தை குறிப்பிட்டு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், திடீர் பல்டி அடித்த அரசு வக்கீல் பவானிசிங்கிற்கும் தனது தீர்ப்பில் குட்டு வைத்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலையில் ஹைகோர்ட்டில் பணியை முடித்துவிட்டு தனது அலுவல் காரில் சந்திரசேகரா வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது காரின் அருகே வந்த இன்னொரு இன்னோவா காரில் பின் இருக்கையில் அமர்ந்தபடி ஒரு வாலிபர் சந்திரசேகராவை தனது ஸ்மார்ட் போனில் படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
இதை கவனித்த, நீதிபதியின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர், வில்சன்கார்டன் பகுதி சிக்னல் ஒன்றில் கார்கள் நின்றபோது, கீழே இறங்கிச் சென்று, வாலிபர் இருந்த காரை வழிமறித்துள்ளார். ஆனால் அதற்குள் சிக்னலில் பச்சை விழுந்துவிடவே, வாலிபர் இருந்த கார் வேகமாக கிளம்பி சென்றுவிட்டது. ஆனால் காரின் பதிவெண்ணை குறித்துக்கொண்ட பாதுகாவலர், அதுகுறித்து வில்சன்கார்டன் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின்பேரில், பதிவெண்ணை வைத்து, காரின் உரிமையாளரை போலீசார் கண்டுபிடித்தனர். கோரமங்களாவில் வசிக்கும் ராஜேஷ் ரெட்டி (28) என்பவர்தான் செல்போனில் படம் பிடித்த வாலிபர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரின் மகனாகும். இதையடுத்து ராஜேஷ் ரெட்டியும், காரை ஓட்டிச் சென்ற டிரைவர் அசோக்கும் கைது செய்யப்பட்டனர்.
பணியில் இருக்கும் அரசு ஊழியருக்கு தொல்லை கொடுப்பது (செக்ஷன் 353), தவறான நோக்கத்துடன் நடந்து கொண்டது (செக்ஷன் 341) போன்ற பிரிவுகளின்கீழ் வில்சன்கார்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் இத்தகவலை துணை கமிஷனர் சந்தீப் பாட்டீல் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிக்க தயங்குகின்றனர்.
No comments:
Post a Comment