சொந்த வீடு அமைப்பதற்கு முதல்படி மனை வாங்குவது. அதற்கே லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும்போது உடனே வீடு கட்டி குடியேறமுடியாத நிலையில்தான் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். கட்டுமான பணியை எப்போது ஆரம்பிக்கப்போகிறோம் என்பது தெரியாத நிலையில் மனை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இட அளவீடு
கட்டுமான பணி தொடங்குவதற்கு ஒருசில ஆண்டுகள் ஆகும் என்றாலும் இடத்தின் உரிமையை நிலைநாடுவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்துவிட வேண்டும். அதற்கு முதல் பணியாக இடத்துக்கான பட்டா, பத்திரத்தில் இருக்கும் அளவுகளை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவீட்டின்படி மனையின் நான்கு பக்க எல்லைகளை வரையறை செய்துவிட வேண்டும்.
சர்வேயர் ஒருவரின் துணைகொண்டு இடத்தை அளந்து கொள்வது நல்லது. எல்லைப்பகுதிகளின் நான்கு முனைகளிலும் கற்களை நட்டு வைத்துவிட வேண்டும். அதைவிட இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்புவது நல்லது. இந்த சுவர்கள் ரெடிமேடாகவும் கிடைக்கின்றன. இடத்தை பாதுகாக்க தற்காலிகமாக சுவர் அமைக்க விரும்புபவர்கள் இத்தகைய சுவர்களை தேர்ந்தெடுக்கலாம். நிரந்தரமாக சுவர் எழுப்ப நினைப்பவர்கள் வலுவான காம்பவுண்ட் சுவர் அமைத்துவிடுவது செலவை குறைக்கும்.
சுவர் எழுப்புவதில் கவனம்
அச்சுவர்கள் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் இருப்பது அவசியம். அதற்காக கோட்டை போன்று ஒரேடியாக உயரமாக அமைந்துவிடக்கூடாது. அவை போதுமான வெளிச்சத்தையும், காற்றையும் வீட்டுக்குள் கொண்டு வர இடையூறாக இருக்கும். அதற்காக சிறிய அளவில் சுவர் எழுப்பினாலும் பிரச்சினையாகவே மாறும்.
முன்பக்க சுவருக்கும் வீட்டுக்கும், நடுவே இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல் பக்கவாட்டு சுற்றுச்
சுவர்களுக்கும், வீட்டுக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கு முன்பு இதையெல்லாம் கவனத்தில் கொள்வது கட்டுமான திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும். சுவர்களின் மேல் பகுதியில் உடைந்த பாட்டில்களை பதிப்பது, இரும்பு கம்பி அமைப்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துவிட வேண்டும்.
கேட் அமைப்பு
அதுபோல் வீட்டின் முன்பக்க சுவர் அமைக்கும்போது ‘கேட்’ அமைப்பது பற்றியும், இறுதி முடிவு எடுத்துவிடுவது நல்லது. அது பிற்காலத்தில் வீடு கட்டும்போது கட்டுமான பணியை சுலபமாக்கும். செலவையும் குறைக்க உதவும். வாசல் பகுதியும், மெயின் கேட்டும் ஒரே நேர்கோட்டில் அமைவதுபோன்று பார்த்துக்கொள்வது நல்லது. அப்படி அமைத்துகொள்ள இடவசதி இல்லாத பட்சத்தில் வாசலிலில் இருந்து மெயின்கேட் தெரியுமாறு முன்னேற்பாட்டுடன் சுற்றுச்சுவர் அமைக்கலாம்.
அதே நேரத்தில் மெயின் கேட்டை பக்கவாட்டு சுற்றுச்சுவர்களுக்கு அருகே அமைப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி அமைத்தால் கதவைத் திறப்பதில் சிரமம் ஏற்படுவது மட்டுமின்றி, கதவுகள் சுவரில் உராயும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. போதுமான இடவசதி இருப்பின் 2 கதவுகளை அமைப்பதற்கு ஏற்றவாறு இடைவெளிவிட்டு முன்பக்க சுவரை கட்டிக்கொள்ளலாம்.
தற்காலிக அறை வசதி
அதில் ஒரு கதவை சிறியதாகவும், ஒரு கதவை பெரியதாகவும் அமைத்துகொள்ளலாம். ஆட்கள் உள்ளே செல்வதற்கு சிறிய கதவையும், கார்கள் போன்ற வாகனங்கள் நுழைவதற்கு பெரிய கதவையும் பயன்படுத்துவது சவுகரியமாக இருக்கும். இப்படி முதலிலேயே சுவர் அமைப்பது சிக்கலாக இருக்கும்பட்சத்தில் வீட்டு வேலை முடிந்தபிறகு இறுதியில் முன்பக்க சுவரை கட்டிக்கொள்ளலாம்.
சுற்றுச்சுவரின் மூலைப்பகுதி ஒன்றில் கட்டுமான பொருட்களை வைப்பதற்கு ஏதுவாக தற்காலிக அறை அமைத்துக்கொள்ளலாம். ஆள்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதியையும் ஏற்படுத்தலாம். இது கட்டுமான பணி நடைபெறும்போது உதவிகரமாக இருக்கும். எனினும் ஆள்துளை கிணறு அமைக்கும் இடத்தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். அது வீட்டு வடிவமைப்பு திட்டத்துக்கு இடையூறாக அமைந்துவிடக்கூடாது.
கண்காணிப்பில் இருக்க வேண்டும்
எந்த இடத்தில் இருந்தால் சரியாக இருக்கும் என்று முதலிலேயே முடிவு எடுத்து விட வேண்டும். வீட்டில் எத்தனை அறைகள் அமைக்கப்போகிறோம். எந்த பகுதி எங்கு வரும்? என்பதை கவனிக்க வேண்டும். முக்கியமாக தண்ணீர் இணைப்பு வசதிகள் கொண்ட குளியலறையை எங்கு அமைக்க போகிறோம் என்பதை இறுதி செய்து அந்த பகுதியில் ஆள்துளை கிணறு அமைப்பது நல்லது.
வீடு கட்டுவதற்கு காலதாமதம் ஆகும் பட்சத்தில் இடத்தை அடிக்கடி சென்று பார்வையிட்டு வர வேண்டும். அதன் மூலம் இடத்துக்கு உரிமையாளர் நீங்கள்தான் என்பதை அக்கம், பக்கத்தினர் அறிந்துகொள்ளும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டும். அத்துடன் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இது இடப்பாதுகாப்புக்கு கூடுதல் வலு சேர்க்கும்.
No comments:
Post a Comment