அனைவருக்கும் பசுமை வணக்கம்!
அரிசி, கத்திரிக்காய், கடுகு உள்பட 15 விதமான உணவுப் பயிர்களில், மரபணு
மாற்றுப் பரிசோதனை நடத்துவதற்கு அனுமதியை அள்ளி வழங்கியிருக்கிறது, மோடி
தலைமையிலான பி.ஜே.பி அரசு!
'120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டுக்கு மரபணு மாற்றப்பட்ட
பயிர் என்பது அவசியம். இதன் மூலமே உணவு உற்பத்தியை உறுதிப்படுத்த
முடியும். பூச்சிகளுக்கு எதிரான புரதத் தன்மைக் கொண்ட நுண்ணுயிரியின்
மரபணுவை, பயிரின் விதைக்குள்ளேயே புகுத்துவதுதான் மரபணுமாற்றுத்
தொழில்நுட்பம். இதன் மூலமாக பூச்சிக்கொல்லி எதுவும் இல்லாமலே பயிரை
வளர்த்தெடுக்கலாம்' என்பதுதான் விஞ்ஞானிகள் முன்வைக்கும் வாதம்.
'இங்கே தற்போது உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை முறையாக
சேமித்துப் பயன்படுத்தினாலே போதும்... 360 கோடி மக்களுக்குக்கூட உணவிட
முடியும். இதைவிடுத்து, வணிக நோக்கில் கொண்டு வரப்பட்டிருக்கும் மரபணு
மாற்றப்பட்ட விதைகளுக்கு வெண்சாமரம் வீசுவது, விதைகளின் மீது
விவசாயிகளுக்கு இருக்கும் உரிமையை முற்றாக அழித்துவிடும். விஷம்
என்பதைத்தான் புரதம் என்று மாற்றிச் சொல்கிறார்கள். விதைக்குள்ளேயே
விஷத்தைப் புகுத்துவது... மனிதகுலத்துக்கு மட்டுமல்ல, உயிரினங்கள்
அனைத்துக்கும் எதிரான செயல். இது எதிர்காலத்தில் என்ன மாதிரியான
விளைவுகளை ஏற்படுத்தும் என்று யாராலும் சொல்லவே முடியாது' என்பதுதான்
இயற்கை ஆர்வலர்களின் எதிர்வாதம்.
'மக்களுக்காகவே நான்' என்றபடி ஆட்சியைப் பிடித்திருக்கும் நரேந்திர மோடி,
இயற்கை ஆர்வலர்களின் எதிர்வாதங்களை ஏறெடுத்தும் பார்த்ததாகத்
தெரியவில்லையே! ஐரோப்பாவில் கடை திறக்க வேண்டியதுதானே?
'மரபணு மாற்றப்பட்ட பயிரை ஏற்றுக்கொள்ளவே முடியாது' என்று கறாராகச்
சொல்லிக் கொண்டிருக்கின்றனவே ஐரோப்பிய யூனியன் நாடுகள். அங்கே போய் கடை
திறக்க வேண்டியதுதானே... இந்த விஞ்ஞானிகள்...? அங்கு இவர்களின்
பிரசாரத்தைச் செய்ய வேண்டியதுதானே...? முடியாது; அங்கெல்லாம் போனால்,
முட்டியைப் பெயர்த்துவிடுவார்கள். காரணம், அவர்களெல்லாம் உங்களுக்கு மேல்
அறிவாளிகளாயிற்றே! அதனால்தான் இளிச்சவாய இந்தியாவுக்குள் எப்படியாவது
திணிக்கப்பார்க்கிறீர்கள். எங்கள் 'கைகளை' பயன்படுத்தி, எங்கள் கண்களை
குருடாக்கப் பார்க்கிறீர்கள்
இது ஒரு பக்கம் இருக்கட்டும்... மரபணு மாற்றுப் பயிர்களில் உட்காரும்,
தேனீ, வண்ணத்துப்பூச்சிகள்... அவற்றிலிருக்கும் மகரந்தங்களுடன் அக்கம்,
பக்கத்து வயல்களுக்கும் சென்று.. அனைத்து வயல்களுக்கும் பரவிவிடும் என்று
இதை உருவாக்கி உலவவிட்டிருக்கும் மான்சான்டோ நிறுவனமே கூறிக்
கொண்டிருக்கிறது. இப்படி பரவியதால், அக்கம் பக்கத்து வயல் விவசாயிகளிடம்,
'என் தொழில்நுட்பத்தை திருடிவிட்டாய்' என்று சொல்லி இந்த நிறுவனம்
நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வம்பிழுப்பது கூட
நடந்திருக்கிறது. அப்படியென்றால், நாளைக்கு மரபணு மாற்றுப்பயிர் விளையும்
காட்டுக்கு பக்கத்து காட்டு ராமசாமி, கோவிந்தசாமிகளின் நிலை என்னாவது.
ஒரு கட்டத்தில் இங்கே இருக்கும் அத்தனை விதைகளும் இந்த மரபணு மாற்று
மலட்டு விதைகளாக மாற்றப்பட்டுவிட்டால், இந்த பூமியில் வாழ்ந்து
கொண்டிருக்கும் புழு, பூச்சி, பறவைகள் எல்லாம்... உணவுக்காக எங்கே போவது.
Source: விகடன்
No comments:
Post a Comment