உலக அளவில் தற்போது வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள உலக வங்கி, இந்த நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்றும், இது பொருளாதார வளர்ச்சிக்கான தீப்பொறியை மீண்டும் பற்றவைப்பதற்கான வாய்ப்பை மங்கச்செய்துவிடும் என்றும் எச்சரித்துள்ளது.
ஜி20 நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான அமைச்சரவைகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்த பிரச்னை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உலக வங்கியின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் தற்போதுள்ளதைவிட உலக அளவில் மேலும் கூடுதலாக 600 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாகவே காணப்படுவதாகவும், இதனால் உலக அளவில் வேலைவாய்ப்பின்மை நெருக்கடி ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உலக வங்கியின் மூத்த இயக்குனர் ( வேலைவாய்ப்பு) நைஜல் ட்வோஸ் கூறுகையில், ” சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகளுக்கு பற்றாக்குறையும், தரமான வேலைவாய்ப்பின்மையும் ஏற்படும் என்பதை உலக வங்கியின் அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற ஒரு சில நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளபோதிலும், ஜி 20 அமைப்பில் இடம்பெற்றுள்ள பலநாடுகளிடையே கூட சம்பளம், வருவாய் போன்றவற்றில் சமனற்ற நிலை காணப்படுவதாகவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
உலக வங்கிக்காக, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு ( Organisation for Economic Co-operation and Development – OECD ) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவை இணைந்து தயாரித்த இந்த ஆய்வறிக்கையில், ஜி 20 நாடுகளில் மட்டும் தற்போது 100 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் வேலை இல்லாமல் இருப்பதாகவும், 447 மில்லியன் மக்கள் மிக மோசமான, அதாவது நாளொன்றுக்கு 2 அமெரிக்க டாலருக்கும் குறைவான சம்பளத்தில் வேலை பார்த்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
2013 – 14 ல் பொருளாதார நிலைமையில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், சர்வதேச அளவிலான வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட மிகக்குறைவாக உள்ளதாகவும், இந்த நிலை மேலும் மோசமாவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் அந்த அறிக்கையில் உலக வங்கி கூறியுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் தற்போது காணப்படும் மந்தமான நிலை நீடித்தால் அது புதிய வேலைவாய்ப்புகளை குறைத்துவிடும் என்று எச்சரிக்கும் அந்த அறிக்கை, ஜி 20 அமைப்பில் உள்ள பல முன்னேறிய நாடுகளில், தொழிலாளர்களின் ஊதியத்தில் முன்னேற்றமில்லாத தேக்க நிலை காணப்படுவதாகவும், சில நாடுகளில் ஏற்கனவே இருந்ததைவிட ஊதியக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வேலைவாய்ப்பின்மை நெருக்கடியை தீர்க்க தற்போதைக்கு எந்த ஒரு மேஜிக் புல்லட்டும் இல்லை என்றும் கூறுகிறது.
அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப 2030 க்குள் 600 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய நெருக்கடி இருப்பதால் தொழிலாளர் நலத்துறை அமைச்சகங்கள் மட்டுமல்லாது, ஒட்டு மொத்த அரசு அமைப்புகளுமே அமைச்சரவை எல்லைகளை தாண்டி, தனியார் துறையினரையும் துணைக்கு அழைத்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் மற்றும் செயல் திட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
மேற்கூறிய நெருக்கடி காரணமாக வருகிற நவம்பர் மாதம் பிரிஸ்பேனில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் கூடி, ஒவ்வொரு நாடும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான உத்திகள் மற்றும் செயல்திட்டங்களை எவ்வாறு வகுப்பது என்பது குறித்து விவாதிக்க உள்ளனர்.
இந்த தருணத்தில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் கூடிய பொதுக்கொள்கைகள் அவசியம் என்றும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்புடன் கூடிய கொள்கைகள்தான் அடித்தளமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் உலக வங்கி மேலும் கூறியுள்ளது.
ஊதுகிற சங்கை உலக வங்கி ஊதிவிட்டது; உஷாராகிக் கொள்ள வேண்டியது நாம்தான்!
No comments:
Post a Comment