தமிழக பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதற்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். செம்மொழி வாரம் கொண்டாட கோரி பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆகஸ்டு 7-ந் தேதியில் இருந்து 13-ந் தேதி வரை சமஸ்கிருத வாரமாக கொண்டாட வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளருக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளர் கடிதம் எழுதியிருப்பதாக தெரிய வந்தது.
மாநிலங்களில் உள்ள மத்திய கல்வி வாரியப் பள்ளிகள் (சி.பி.எஸ்.இ.), கேந்திரிய வித்யாலயா சங்கேதன் (கே.வி.எஸ்.), தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) ஆகியவை இந்த கொண்டாட்டத்தை நடத்தும்போது, மாநில, மாவட்ட மற்றும் பல்வேறு நிலைகளிலும் அதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று மாநில அரசுகளை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
இங்கு பொருத்தமற்றது
பழம்பெரும் மொழியான தமிழ் மொழியின் அடிப்படையில், தமிழகம் பாரம்பரிய கலாசாரங்களைக் கொண்டது என்பது உங்களுக்கு தெரியும். இங்கு சமூகநீதி மற்றும் மொழி ஆகியவை வலிமையான இயக்கமாக உள்ளன.
எனவே சமஸ்கிருத வாரம் என்ற ஒரு கொண்டாட்டத்தை அதிகாரபூர்வமாக அரசு சார்பில் தமிழகத்தில் கொண்டாடுவது மிகவும் பொருத்தமற்றது. அந்தந்த மாநிலத்தின் மொழிவாரியான பாரம்பரியத்தின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் செம்மொழி வாரம் என்ற ஒரு நிகழ்வை ஏற்படுத்துவது மிகவும் பொருத்தமாக அமையலாம்.
கடிதத்தில் திருத்தம்
எனவே அந்தந்த மாநிலங்கள் மற்றும் அங்குள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஆகியவை, அந்த மாநிலத்தில் உள்ள கலாசாரம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் கொண்டாட்ட விழாக்களை நடத்துவதற்கு ஏதுவான வகையில் கடிதத்தில் மாற்றங் களை செய்யும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.
இந்தியா போன்ற பல பிரிவுகளைக் கொண்ட நாட்டில், இதுபோன்ற விழாக்களை நடத்துவதுதான் கலாசார மற்றும் மொழி உணர்வுகளுக்கு பொருத்தமாக இருக் கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment