மூடுபித்ரி பகுதியில் இளம்பெண்களின் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்து வந்த தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆபாச எஸ்.எம்.எஸ்.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள மூடுபித்ரி பகுதிகளில் சில இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளின் செல்போன்களுக்கு கடந்த சில மாதங்களாக மர்மநபர் ஒருவர் ஆபாசமாக பேசியும், ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து மூடுபித்ரி போலீசுக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அந்த நபரை பற்றிய எந்த விவரமும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர்.
வெள்ளை காகிதத்தில்…
இந்த நிலையில், மூடுபித்ரியை சேர்ந்த சங்கீதா (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது ஸ்கூட்டரில் அதே பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்றார். அங்கு வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்கி விட்டு வெளியே வந்த சங்கீதா தனது ஸ்கூட்டர் அருகே வந்தார். அப்போது ஸ்கூட்டரில் ஒரு வெள்ளை காகிதம் இருந்தது. அதில், ‘‘தயவு செய்து உங்கள் செல்போனில் இருந்து இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று எழுதி ஒரு செல்போன் நம்பர் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து சங்கீதா தனது கணவரிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் அந்த காகிதத்தை மூடுபித்ரி போலீசில் கொடுத்து, புகார் செய்தனர்.
‘பொறி’ வைத்து பிடிக்க திட்டம்
இதையடுத்து போலீசார் விசாரித்தபோது, சங்கீதா கொடுத்த செல்போன் நம்பரும், ஏற்கனவே பல பெண்களிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்தவரின் நம்பரும் ஒன்றாக இருந்தது. இதையடுத்து பெண்களுக்கு ஆபாச எஸ்.எஸ்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்து வரும் நபரே, சங்கீதாவின் ஸ்கூட்டரில் தனது நம்பரை எழுதி வைத்துள்ளார் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
மேலும் அந்த நபர் மூடுபித்ரி பகுதியில் சுற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த நபரை ‘பொறி’ வைத்து பிடிக்க திட்டமிட்டனர்.
தர்மஅடி
இதையடுத்து மூடுபித்ரி போலீசார், சங்கீதாவிடம் தங்களது திட்டத்தை கூறினார்கள். அதன்படி, சங்கீதா நேற்று அந்த செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு, ‘உங்களை பார்க்க விரும்புகிறேன், அதனால் மூடுபித்ரி டவுன் பகுதிக்கு வாருங்கள்’ என்று கூறினார். அதை நம்பி அந்த நபர், சங்கீதாவை பார்ப்பதற்காக மூடுபித்ரிக்கு வந்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த சங்கீதாவின் உறவினர்கள், அந்த நபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கைது
இதையடுத்து, அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவரது பெயர் மோகி சிம் (வயது 42) என்பதும், மூடுபித்ரி அருகே உள்ள மொகல்லா பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் அதே பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மோகி சிம் செல்போன் கடைகளில் ரீசார்ஜ் செய்ய வரும் பெண்கள் தங்களது நம்பரை சொல்லும்போது, அவர்களுக்கு தெரியாமல் அந்த நம்பரை தனது செல்போனில் குறித்துக் கொள்வார். பின்னர் அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு, ஆபாசமாக பேசுவது, ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்து உள்ளார். இதுபோன்று கடந்த 1½ ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மூடுபித்ரி போலீசார் வழக்கு பதிவு செய்து, மோகி சிம்மை கைது செய்தனர்.
மூடுபித்ரி பகுதியில் பெண்களின் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி வந்த நபர் பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment