மகாராஷ்டிர மாநிலத்தில் முஸ்லிம் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அந்த ஒதுக்கீடு தற்போதைய இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பாதிக்காத அளவில் இருக்க வேண்டும் என மகாராஷ்டிர காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கை புதிதல்ல. மற்ற சமூகத் தினரின் இட ஒதுக்கீடு பாதிக்கப் பட்டு விடக்கூடாது” என்றார்.
மராத்தா மற்றும் முஸ்லிம் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பரிந்துரை காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு முன் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.
இதனிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பவுசியா கான், மஜீத் மேமன், முனாப் ஹக்கீம் ஆகியோர் முதல்வர் பிருத்வி ராஜ் சவாணை சந்தித்து, இடஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவை விரைவில் அறிவிக்க வலியுறுத்தினர்.
திங்கள்கிழமை அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுடன் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்கப்படும் என அவர்களிடம் முதல்வர் உறுதியளித்தார்.
தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே தலைமையில் அமைக்கப்பட்ட குழு, மராத்தா சமூகத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளது. அமைச்சரவையில் ஒரு பகுதியினர் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதமும், முஸ்லிம்களுக்கு 4 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்திருந்தனர். ஆனால், ரானே தனது பரிந்துரையில் அதை நிராகரித்து விட்டார்.
No comments:
Post a Comment