ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் தமது கட்சிப் பதவியைத் திடீரென ராஜினாமா செய்துள்ளது அக்கட்சியினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார குழு உறுப்பினராக மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் உள்ளார். இதேபோல் ஹரியானா மாநில அமைப்பாளரான நவீன் ஜெய்ஹிந்த் தேசிய நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கிறார். இவர்கள் இருவரும் நேற்று கட்சி பொறுப்புகளில் இருந்து திடீரென ராஜினாமா செய்தனர்.
“நாங்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டுமே விலகி இருக்கிறோம்; கட்சியை விட்டு விலகவில்லை” என்றும் அறிவித்துள்ளனர் ஏற்கெனவே கட்சியின் சில மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு விலகியுள்ள நிலையில் இவர்களின் இந்த அறிவிப்பு ஆம் ஆத்மி கட்சியில் மேலும் பிளவை உண்டாக்கும் என கட்சி தொண்டர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
இருவரது ராஜினாமாவையும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்னும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.சமீபத்தில் அவதூறு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட கட்சித் தலைவர் கேஜ்ரிவால், ஜாமீன் தொகை கட்டமாட்டேன் என நீதிமன்றத்தில் வீம்பாக கூறியதும் நீதிமன்ற விமர்சனத்துக்குப் பின்னர் ஜாமீன் தொகை கட்டுவதாக இறங்கி வந்ததும் கட்சி ஆதரவாளர்களிடையே பெருத்த விமர்சனத்தை ஏற்படுத்தியதால் கட்சி மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment