வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் செயல்பட்டுவரும் வர்த்தக சேம்பரின் தலைவர் தேர்தல் கடந்த 26ஆம் தேதியன்று அங்கு நடைபெற்றது. இதில் பிரபல இந்தியத் தொழிலதிபரும், மத்திய கிழக்கு நாடுகளின் சில்லறை வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் லூலு குழுமத்தின் தலைவருமான எம்ஏ யூசுப் அலி(58) மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தம் 1,721 வாக்குகளைப் பெற்றதன்மூலம் அவர் இந்தப் பதவியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார். புலம் பெயர்ந்த வர்த்தகர்களில் இவரே அதிகப்படியான வோட்டுகளைப் பெற்றவர் என்ற பெருமையும் இதன்மூலம் அவருக்குக் கிடைத்துள்ளது. ஐந்து பெண்கள் மற்றும் எட்டு புலம் பெயர்ந்த வேட்பாளர்கள் உட்பட 70 எமிரேட் குடிமக்கள் கொண்ட நான்கு பிரிவுகளில் இந்தத் தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 14,555 வாக்குகள் அளிக்கப்பட்டு நான்கு ஆண்டு கால இயக்குனர்கள் குழுவிற்கான 13 உள்ளூர் உறுப்பினர்களும் இந்தத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டனர். அபுதாபியின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் விவகாரங்களை மேம்படுத்தவும், கட்டுப்படுத்தவும் அரசாங்கத்தின் மேற்பார்வையில் செயல்பட்டுவரும் தன்னாட்சி நிறுவனம் இதுவாகும்.
இதன் தலைவரே மற்ற 15 நிர்வாகக் குழு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெறுகின்றார். மேலும் ஜனநாயக வாக்கெடுப்பின்மூலம் உலகளவில் வெளிநாட்டவரும் இயக்குனர் குழுவில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே அரசு நிறுவனம் இந்த வர்த்தக சேம்பராகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலியின் ஹாட்ரிக் வெற்றி குறித்து வாழ்த்து தெரிவித்த அந்நாட்டின் கலாச்சாரம், இளைஞர் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யாம் அவரது பணி தொடர குறிப்பாக அபுதாபியின் வளர்ச்சிக்கு பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டார்.
தன்னைத் தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள யூசுப் அலி தன்னுடைய பொறுப்புகளை உணர்ந்து யுஏஈ- இந்திய வர்த்தக உறவுகள் மேம்படவும், வர்த்தக பங்குதாரர்களின் பரஸ்பர நன்மைக்கும் முயற்சி செய்வதாகத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment