Latest News

மதுவை ஒழித்து,மாதுவை காப்போம்! (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

காமக்கொடூரன்களால் கற்பிழந்து நிற்கும் அபலை பெண்களுக்கு இம்மடலை சமர்ப்பிக்கிறேன்.

பெண்ணுரிமை பற்றி அதிகம் பேசும் நமது நாட்டில்  தற்போது பெண்களின் கற்பு ஆண் கயவர்களால் அதிகம் சூறையாடப்பட்டுவருவது வேதனைக்குரியதாகும்.

சில நேரங்களில் கற்பழிக்கப்பட்ட பெண்களை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பி விடுகின்றனர்.

இது போன்ற நிகழ்வுகள் இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாகவே நடந்து வந்த போதிலும் தற்போது இதனுடைய வீரியம் அதாவது பெண்கள் கற்பழிக்கப்படும் துயர நிகழ்வுகள் ஆங்காங்கே புற்றீசல் போல கிளம்பியுள்ளதையும் அதிலும் ஒழுங்கீனமான வாழ்க்கையை நவநாகரீகம் என்ற பெயரில் கடை பிடித்து வரும் மேலை நாடுகளில் கூட நடக்காத அளவுக்கு நமது இந்திய தேசத்தில் அதிகமாகி விட்டதே என்ற வேதனையின் வெளிப்பாடே இந்த கட்டுரை!

ஒரு காலத்தில் உலக நாடுகளுக்கே ஒழுக்கம் போதித்த நமது தேசத்தின் இன்றைய ஒழுங்கீனத்தை கண்டு ஐக்கிய நாடுகளின் சபையே கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு பாரதம் பின் தங்கியிருப்பதை நினைக்கும் போது,கண்களில் கண்ணீருக்கு பதிலாக செந்நீரே(இரத்தம்)வழிந்தோடுகிறது.

காலையில் எழுந்ததும் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரமானாலும் நடந்தே போய் தினசரி நாளிதழ் வாங்கி பழகிய நான் இப்போதெல்லாம் செய்திகள் பார்க்கவே வெட்கப்படுகிறேன்.

எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு சம்பவங்கள்,பாலியல் வண்புணர்ச்சி,அதன் உக்கிரமாக படுகொலை நிகழ்வுகள் என தேசம் முழுவதும் நிறைந்து வழிந்தோடும் அவலங்களை சகித்து கொள்ளமுடியவில்லை.

இதுபோன்ற சம்பவங்களுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் முதல் காரணம் மதுப்பழக்கம் இரண்டாவது காதல் என்ற தகவலே வழக்குப்பதிவு செய்யும் காவல் துறையினரால் கூறப்படுகிறது.

கடந்த மாதத்தில் உ.பி.மாநிலத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கற்பழிப்பு சம்பவங்களும்,படுகொலை நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன.உ.பியின் பதான் மாவட்டத்தில் 2சிறுமிகள் காமக்கொடூரன்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டு சென்ற சம்பவத்தில் தான் ஐக்கிய நாடுகளின் சபையும்,அமெரிக்காவும் கூட கண்டனம் தெரிவித்துள்ளன.

உ.பியின் ஹமிர்பூர் மாவட்டம் சுமேர்பூர் காவல்நிலையத்தில் விசாரணை கைதியாக சிறை வைக்கப்பட்ட தனது கணவனை காணவந்த இளம்பெண்ணை காவல் துணை ஆய்வாளர் பாண்டே என்பவனும் அவனுடன் பணிபுரியும் மூன்று காவலர்களும் சேர்ந்து கற்பழித்துள்ள சம்பவம்,நீதி தேவதையே காரிதுப்பும் அளவுக்கு கேவலமாகி விட்டது.

உ.பியின் பிஜ்னோர் மாவட்டத்தில் 14வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை,மொராதாபாத் மாவட்டம் ராஜ்பூர் மிலாக் கிராமத்தில் 16வயது சிறுமி தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவம்,என உ.பி.மாநிலமே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பெண்ணியவாதிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11.06.14 அன்று தலைநகர் டெல்லியில் 25வயது இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த நங்கல் தேவட் பகுதியை சேர்ந்த ஜிதேந்தர்,ஜெய்பகவான்,அஜய் என்ற மனித உருவத்தில் இருந்த மூன்று மிருகங்களை தெற்கு டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

12.06.14 அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சோலாபாலம் அருகே வசித்த 5வயது சிறுமியை பஸ் கிளீனராக இருந்த 17வயது இளம் மிருகம் பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்து விட்டது.

வடமாநிலங்களை உலுக்கி கொண்டிருந்த இந்த கற்பழிப்பு தொற்று நோய்,தற்போது தமிழகத்திலும் பரவுகிறதோ?என அச்சம் கொள்ளும் வகையில் சமீபத்தில் பொள்ளாச்சி பஸ்நிலையத்தின் பின்புறம் உள்ள தேவாலய விடுதியில் தங்கி இருந்த ஆதரவற்ற 5 மற்றும் 6ம்வகுப்பு படித்து கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை அந்த பகுதியில் ஹோட்டலில் வேலை பார்த்து கொண்டிருந்த வீராசாமி என்ற காமுகன் கொடூரமான முறையில் வண்புணர்ச்சி செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

இத்தகைய கொடுமைகளை கண்டு நெஞ்சம் பதறும் நல்லோர்கள் கேட்பது இதுதான்,இவனுகளுக்கெல்லாம் அக்கா,தங்கச்சி கிடையாதா?

இந்த கேள்விக்கும் கூட இடமில்லாத வகையில் பெற்ற மகளையே கற்பழித்த தந்தை கைது,சொந்த சகோதரியை பலாத்காரம் செய்த அண்ணன் கைது என வெட்கம் கெட்ட செய்திகளும் வரத்துவங்கி விட்டது.

மதுவிற்கு அடிமையான மனித வடிவிலான மிருகங்கள் தங்களது வாழ்க்கைப்பற்றியோ,அல்லது மற்றவர்களின் வாழ்க்கையை பற்றியோ அக்கறை இல்லாதவர்கள்.காரணம் அவர்களது சிந்திக்கும் திறனை ஆல்கஹால் என்னும் கொடிய விஷம் அழித்து விடுகிறது இது போன்ற குடிகாரன்களுக்கு தாய் யார்?தாரம் யார்? சகோதரி யார்?மகள் யார்?என்ற பாகுபாடு எதுவும் தெரிவதில்லை.  

நமது தேசத்தின் பாரம்பரிய நல்லொழுக்கம் எங்கே தொலைந்தது?எப்படி தொலைந்தது?

இதற்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால்....ஆட்சியாளர்களால் ஊக்குவிக்கப்படும் டாஸ்மாக் போன்ற மதுக்கடைகளே!

13வயதிலேயே தனது"குடி"உரிமையை நிலைநாட்ட துடிக்கும் சிறார்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கும் இவ்வேளையில்,

மனிதனை மிருகமாக்கி கொண்டிருக்கும் மதுவென்னும் (ஆல்கஹால்) விஷத்தை,பூரண மதுவிலக்கின் மூலம் மதுவை ஒழித்து,மாதுவை காப்போம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.