Latest News

சுற்றி வளைக்கும் புற்று! ஓர் உஷார் ரிப்போர்ட் !!தற்போது அனைவரும் தெரிந்து கொள்ள கூடிய தகவல் !!


ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மட்டுமே மக்களைப் பதறவைத்த புற்றுநோய், இன்று சினிமா இடைவேளை முடிந்ததும் ஸ்க்ரீனில் விரியும் ‘இவர்தான் முகேஷ்…’ என்று கரகரக் குரல் கேட்டதும் கைதட்டி விசிலடிக்கும் அளவுக்கு மலிந்துவிட்டது.

‘அவருக்கு கேன்சராம்’ என எங்கோ, யாருக்கோ வந்ததைப் பற்றி அதிர்ச்சியுடன் பேசிக்கொண்டது ஒரு காலம். அப்போது எங்கோ இருந்த புற்றுநோய் இப்போது நம்மைச் சுற்றி கொடிய நச்சுபோலப் பரவி வியாபித்துவருகிறது. தன் அழகால் உலகை வசீகரித்த ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, மார்பகப் புற்றுநோய் காரணமாகத் தன் இரண்டு மார்பகங்களையும் அகற்றிக்கொண்டது சமீபத்திய செய்தி. மனீஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ் என இந்திய நடிகைகளும் புற்றுநோய்க்குத் தப்பவில்லை. நோயின் கொடுமையில் இருந்து தற்காத்துக்கொள்ள, பிரபலங்களான இவர்களிடம் பணம் இருக்கிறது.

ஏழைகளுக்கு என்ன இருக்கிறது? நோயின் வேதனையைத் தாங்க முடியாமல், சிகிச்சைக்குப் பணம் புரட்ட முடியாத பிள்ளை களின் குற்றவுணர்ச்சியைக் காணச் சகிக்காமல் மரணத்தை எதிர்பார்த்து மருத்துவமனைகளில் மன்றாடிக்கிடக்கிறார்கள் பாதிக்கப்பட்ட பல முதியவர்கள்.  தேசியப் புற்றுநோய் ஆவணக் காப்பகம், ஒவ்வோர் ஆண்டும் புற்றுநோய்குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடு கிறது. இதன்படி ஏறத்தாழ 22 லட்சம் புற்றுநோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் 80 ஆயிரம் புதிய புற்றுநோயாளிகள் உருவாகின்றனர். இதில் தமிழ்நாட்டின் பங்கு 20 ஆயிரம் பேர். இதில் 25 சதவிகிதம் பேர் எந்தவித மருத்துவ வசதிகளும் எடுத்துக்கொள்ள வசதியின்றி, நோயின் கொடுமையால் மடிந்துபோகின்றனர். தேசிய அளவில் கணக்கிட்டால், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 100 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இவர்களில் 50 பேர் இறந்துவிடுகின்றனர். இது எல்லாமே மொத்த நாடும் ஒரு திறந்தவெளி நோய்க் கூடாரம்போல மாறிக்கிடப்பதற்கும், நமது வாழ்க்கைத் தரம் மேலும் மேலும் கீழே இறங்கிக்கொண்டிருப்பதற்குமான ஆதாரங்கள். இதைப் பற்றி மருத்துவர் கு.சிவராமனிடம் பேசினேன்.

”இன்னாருக்குத்தான் புற்றுநோய் வரும் என்ற கணக்குகள் பொய்யாகும் காலம் இது. பரம்பரை யில் யாருக்கும் இல்லை. புகை, மது போன்ற தீய பழக்கங்கள் எதுவும் இல்லை என்றாலும், ஒருவருக்குப் புற்றுநோய் வருகிறது. காரணம், நாம் வாழும் சூழல். இன்றைக்கு மனிதர்களைத் தாக்கும் பெரும்பான்மையான புற்றுநோய்க்குக் காரணம், பிளாஸ்டிக். பிளாஸ்டிக் மூலம் புற்றுநோய் வரும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்த உலகமே ஒரு நோய்க்கிடங்காக மாறிவருவதற்கு பிளாஸ்டிக்தான் காரணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

ஒரு நிமிடம் அப்படியே நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தைச் சுற்றி நோட்டம் விடுங்கள். எவை எல்லாம் பிளாஸ்டிக்? கம்ப்யூட்டர், மவுஸ், கீ போர்டு, டெலிபோன், செல்போன், மணிபர்ஸ், வாட்ச், டிபன் பாக்ஸ், செருப்பு… வீட்டுக்குப் போனால் ஃபிரிஜ், வாஷிங்மெஷின், டி.வி., வீதியில் இறங் கினால் பேருந்து, ஆட்டோ என  அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக்மயம்தான். இந்த உலகத்தை பிளாஸ்டிக் ஓர் ஆக்டோபஸைப் போல் சூழ்ந்திருக்கிறது.பொதுவாக, வெப்ப நிலை 100 டிகிரிக்கு மேல் போனாலோ, 15 டிகிரிக் குக் கீழ் போனாலோ பிளாஸ்டிக்கில் இருந்து டை-ஆக்ஸின் என்ற வேதிப் பொருள் வெளியேறும். இது புற்றுநோயை உண்டாக்கும் ஓர் ஆபத்தான வேதிப்பொருள். கார்களை நான்கைந்து மணி நேரத்துக்கும் மேல் வெயிலில் நிறுத்தி விட்டுக் கதவைத் திறந்தால், உள்ளிருந்து ஒரு வாசனை வருவதைக் கவனிக்கலாம். அது பென்சீன் மற்றும் ஸ்டைரீன். காரின் உட்பகுதி முழுக்க ஆக்கிரமித்திருக்கும் பிளாஸ்டிக், அதிக வெப்பத்தின் காரணமாக உமிழும் ஆபத்தான வேதிப்பொருட்கள் அவை. அதுபோலவே, இந்த அறையில் நாம் அமர்ந்திருக்கிறோம். ஒன்றரை டன் ஏ.சி. ஓடுகிறது.

நாள் முழுக்க இந்த ஏ.சி. ஓடும்போது வெப்ப நிலை 15 டிகிரிக்கும் கீழே குறையலாம். இந்த அறையில் நிறைந்திருக்கும் பிளாஸ்டிக்குடன் அது வினைபுரிந்து ஆபத்தான டை-ஆக்ஸினை வெளிவிடலாம். ஆகவே, முதல் கட்டமாக நமது ஒவ்வொரு இன்ச் வாழ்க்கையிலும் சூழ்ந்திருக்கும் பிளாஸ்டிக்கில் இருந்து முடிந்த வரை வெளியில் வர முயல வேண்டும்!” என்கிறார் சிவராமன்.நமது உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் வேதிப் பொருட்கள் இன்னும் ஓர் எமன். அது கீரையோ, முள்ளங்கியோ, முட்டைக்கோஸோ…

எதுவாயினும் நமது காய்கறிகளில் அளவுக்கு அதிகமாகப் பூச்சிமருந்துகள் தெளிக்கப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து உண்ணும்போது புற்றுநோய்க்கான வாய்ப்பு கூடுதலாகிறது. பிராய்லர் கோழியையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். சதை அதிகமாக வளர்ந்து சீக்கிரமே எடை பிடிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தக் கோழிகள் மனித இனத்தின் பேரபாயம். பிராய்லர் கோழிகளைச் சிறு வயது முதலே சாப்பிடும் பெண் குழந்தைகள், வழக்கத்தைவிடக் குறைந்த வயதிலேயே பூப்படைகின்றனர். பிராய்லர் கோழி, சாக்லேட் போன்றவற்றில் அளவுக்கு அதிகமான கலோரிகள் இருப்பதால் பெண்களின் ஹார்மோன் கூடுதலாகத் தூண்டப் படுகிறது. மருத்துவ ஆய்வு முடிவுகளின்படி, 14-15 வயதில் பூப்படையும் பெண்களைவிட, 9-10 வயதில் பூப்படையும் பெண்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.அடுத்தது புகையிலை. பான் மசாலா, குட்கா, புகையிலை, சிகரெட், பீடி போன்றவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், யார் கேட்கிறார்கள்? உலக அளவில் புகையினால் உண்டாகும் புற்றுநோயில் 70 சதவிகிதம் சீனா மற்றும் இந்தியாவில்தான் வருகிறது.Sudden infant death syndrome பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இரண்டு முதல் ஆறு மாதக் குழந்தைகள், இன்ன தென்று அறிய முடியாத காரணத்தால் திடீர் திடீர் என்று செத்துப்போகின்றன. இப்படி உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் சாகின்றன. காரணம் தேடி ஆராய்ச்சிகள் நடக்கின்றன. முதல் கட்ட ஆராய்ச் சியில் தெரியவந்திருக்கும் உண்மை, இந்தக் குழந்தைகளின் மரணத்துக்கு சிகரெட் புகையும் ஒரு முக்கியக் காரணம். யாரோ, எங்கோ ஊதித் தள்ளிய சிகரெட் புகை, ஒரு சின்னஞ் சிறு குழந்தையின் உயிரைப் பறிக்கிறது.இதைத் தவிர, சில நிலப்பரப்புகளில் இயற் கையாகவே கதிரியக்கம் அதிகம் இருக்கும். தமிழ்நாட்டின் தென்பகுதி நிலம் இத்தகையதுதான்.

அங்கு காலம் காலமாக வாழும் மக்களின் உடல், இயற்கையான கதிரியக்கத்தை ஏற்றுக்கொள்ளப் பழகியிருக்கும். ஆனால், அந்தக் கதிரியக்க மண்ணை லாப வெறியுடன் தோண்டி எடுக்கும்போது, அதிகமாக வெளியாகும் கதிரியக்கத்தைத் தாங்கும் சக்தி மக்களுக்கு இல்லை. தென்பகுதி மக்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.இவற்றைவிட மருத்துவர் சிவராமன் சொல்லும் ஒரு விஷயம் முக்கியமானது. ”மனிதர்களின் வாழ்வில் 35-45 வயது முக்கியமானது. அதுவரை ஓடியாடி வேலை பார்த்திருப்போம். வாழ்க்கைபற்றிய அபரிமிதமான கற்பனைகளும் கனவுகளும் வடிந்து ‘யதார்த்தம் இதுதான்; இப்படித்தான் நம் வாழ்க்கை இருக்கப்போகிறது’ என்பது புரிந்திருக்கும். ஆனால், தற்போதைய சூழலில் இந்த வயதில் உள்ளவர்கள் நிம்மதி இழந்துள்ளனர்.

ஏராளமான கடன்கள், தவணைகள், அலுவலக நெருக்கடிகள், குடும்ப உறவுச் சிக்கல்கள் என மன அழுத்தத்தில் இருக் கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.மனதின் அடி ஆழத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதுதான் கேன்சர் உள்ளிட்ட  அனைத்து நோய்களையும் தடுப்பதற்கான மருந்து. பலர், கார் வாங்கினால், ஐபோன் வாங்கினால் அது மகிழ்ச்சி என்று நினைக்கிறார்கள். வாரக் கடைசியில், மது பாட்டில்களில் மகிழ்ச்சியைத் தேடுகின்றனர். அது செயற்கையான மகிழ்ச்சி, ஒரு டெலி காலர் உங்களிடம் சிரித்துப் பேசுவதைப் போல. அதுவும் சிரிப்புதான். ஆனால், உணர்ச்சியற்ற சிரிப்பு. மாறாக, மகிழ்ச்சி என்பது இயற்கையைச் சிதைக்காமல் வாழ்வது. அடுத்தவர்களுக்கு உதவிசெய்து வாழ்வது.அடிமையைப் போல உழைக்காமல் சுதந்திரத்துடன் சிந்திப்பது. ஆரோக்கியமான பழக்கவழக்கங்களோடு இருப்பது. கள்ளம் கபட மற்று இருப்பது.

மற்றபடி, மகிழ்ச்சிக்கு வேறு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை!’”சோதனை அவசியம்!”மருத்துவர் அய்யப்பன், புற்றுநோய் சிறப்பு மருத்துவர், மெட்ராஸ் கேன்சர் கேர் பவுண்டேஷன்:      ”மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலந்தோறும் புற்றுநோயாளிகள் உருவாகிக்கொண்டுதான் உள்ளனர். இப்போது மக்களிடையே விழிப்பு உணர்வு அதிகரித்திருக்கிறது. ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் பெரும்பாலான புற்று நோய்களைக் குணமாக்கிவிட முடியும் என்பதுடன் சிகிச்சைக்கான செலவும் குறையும். இதற்கு, 40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் உடம்பில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக உணர்ந் தால், உடனே மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் ஊரில், ‘நாங்கள்லாம் ஆஸ்பத்திரிக்கே போக மாட்டோம்’ என உடல்நலம் மீது அக்கறையின்றி இருப்பதை ஏதோ குடும்பக் கௌரவம் போலச் சொல்கிறார்கள். மாறிவிட்ட வாழ்க்கைச் சூழல் காரணமாக நோய்கள் பெருகிவிட்ட நிலையில், முன்கூட்டியே சோதனை செய்துகொள்ள வேண்டும். மனித உடம்பு எந்த நோயாக இருந்தாலும், உணர்ந்துகொள்ளும் வகையில் ஓர் அறிகுறியைக் காட்டத்தான் செய்கிறது. அதை நாம் சரியாக இனம் காண வேண்டும்!”செக் லிஸ்ட்!இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது ‘நமக்கும் புற்றுநோய் இருக்குமோ?’ எனச் சந்தேகம் வரலாம். கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் நீங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.*அளவுக்கு அதிகமான உடல் சோர்வு.*எதிர்பாராத இடங்களில் கட்டிவருவது. அது நீண்ட நாட்களாக இருக்கிறது என்றால், உடனே பார்க்க வேண்டும்.*நீண்ட காலமாக மது, புகை, புகையிலை பழக்கம் இருந்தால், வாய்ப்பு அதிகம்.*நாள்பட்ட நோய்கள் இருந்தால், புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.*பாரம்பரியமாக உங்கள் பெற்றோருக்கோ, தாத்தா, பாட்டிக்கோ இருந்தால், எச்சரிக்கை அவசியம்!

நன்றி பாரதி தம்பி

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.