அரசின் செயல்பாடுகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த அரசு துறைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட இணையதளங்கள் அனைத்தும் தற்போது முடங்கி கிடக்கிறது. இதனால், அரசின் அன்றாட நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ள முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகளை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் அரசின் 32 துறைகளுக்கும் பிரத்யேகமாக இணையதளம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், அரசு துறைகளில் அன்றாடம் நடக்கும் செய்திகள், துறையின் மேம்பாடு திட்டம், புதிய அரசாணை ஆகிய விவரங்கள் வெளியிட வேண்டும். ஆனால், அவ்வாறு உடனடியாக செய்யாமல் புதிய தகவல்கள் எல்லாம் பல நாட்கள் கழித்துதான் வெளியிடப்படுகிறது. இதனால், தற்போது அரசு இணையதளங்களில் பலவும் பழைய தகவல்களாக உள்ளன.
குறிப்பாக ஒரு சில துறைகளில் அதிகமாக மக்கள் நல திட்ட பணிகளுக்கான அரசாணை அதிகளவில் பிறப்பிக்கப்படும். அதை, அந்த துறைக்குரிய இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக பொதுப்பணித்துறையில் அவ்வபோது பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை வெளியிடப்படும். ஆனால், அந்த அரசாணை உடனடியாக இணையதளங்களில் வெளியிடப்படுவதே இல்லை. அவை, பல நாட்கள் கழித்தே வெளியிடப்படுகிறது. இதற்கு சாட்சியாக தமிழக அரசு இணையதளத்தில் பொதுப்பணித்துறை பதிவில் கடந்த ஆகஸ்ட் 2013ல் வெளியிடப்பட்ட அரசாணையுடன் தான் கிடக்கிறது.
இதே போல பிற்படுத்தப்பட்டோர், இந்து சமய அறநிலையத்துறை, போக்குவரத்து, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக விவரங்கள் அனைத்தும் பழைய தகவல்களோடு தான் உள்ளன. இதனால், மக்கள் நல திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அரசு இணைதளங்கள் அனைத்தும் பயனற்று போய் கிடக்கிறது.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அரசு துறைகளில் மேம்பாடு பணிகள், அரசாணைகள் போன்றவையை பதுக்கியே வைத்து இருப்பதால் மக்கள் நல திட்டங்கள் என்னென்ன நிறைவேற்றப்படுகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை.
மேலும், ஒவ்வொரு திட்டங்களை பற்றிய தகவலை மக்களிடையே கொண்டு சென்றால் தான் அதில் உள்ள குறைகள் தவறுகள் களையப்படும். ஆனால், திட்டங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல் இது போல் மறைத்து வைப்பதால் மக்களிடையே தவறான எண்ணம் தான் அரசின் மீது மேலோங்கும்‘ என்றார்.
No comments:
Post a Comment